சென்னை: 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போல நினைத்து முடிவுகளை எடுத்தால், சரி செய்ய முடியாத அளவுக்கு, பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்' என, அ.தி.மு.க., இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமிக்கு, பா.ஜ., மேலிடம் அறிவுரை கூறிய தகவல் வெளியாகியுள்ளது.
வரும் 2024 லோக்சபா தேர்தலில், தமிழகத்திலிருந்து கணிசமான எம்.பி.,க்கள் வர வேண்டும் என, பா.ஜ., மேலிடம் விரும்புகிறது. அதற்காக வலுவான கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளில், கடந்த சில மாதங்களாகவே, பா.ஜ., ஈடுபட்டு வருகிறது.
ஜெயலலிதா மறைவுக்குப் பின் ஏற்பட்ட உட்கட்சி பிரச்னைகளால், அ.தி.மு.க., இப்போது மூன்றாக பிளவுபட்டுள்ளது. 2024-ல் தி.மு.க., கூட்டணியை வீழ்த்த வேண்டுமானால், அ.தி.மு.க., ஒரே கட்சியாக இருக்க வேண்டும் என, பா.ஜ., வலியுறுத்தி வருகிறது.
இதை எவ்வளவோ எடுத்துக் கூறியும், சசிகலா, பன்னீர்செல்வத்தை இணைத்து கொள்ள, பழனிசாமி மறுத்து வருகிறார். இதனால், சமீபத்தில் சென்னை வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை, பழனிசாமி சந்திக்கவில்லை.
நீங்கள் முடிவெடுத்தால்
இந்நிலையில், பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி ஆகியோரை, சமீபத்தில் பா.ஜ., மேலிடம் சார்பில் சிலர் சந்தித்துள்ளனர்.
அப்போது, 'எம்.ஜி. ஆர்., மறைவுக்கு பின், ஜெயலலிதாவுக்கு வராத நெருக்கடியா... இரட்டை இலை முடக்கப்பட்ட போதும், எம்.ஜி.ஆரின் மனைவியே எதிர்த்து நின்றபோதும், தனி சின்னத்தில் போட்டியிட்டு, அ.தி.மு.க.,வையும் ஆட்சியையும் கைப்பற்றியவர் ஜெயலலிதா.
'அதுபோல நானும் எதற்கும் தயாராக இருக்கிறேன்' என, பழனிசாமி கூறியிருக்கிறார்.
அதற்கு பதிலளித்த பா.ஜ., தரப்பினர், 'எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா மக்கள் செல்வாக்கு மிக்க தலைவர்கள். அவர்களை போல நினைத்து, நீங்கள் முடிவெடுத்தால், அரசியலில் பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும்' என, பா.ஜ., துாதர்கள் எச்சரித்துள்ளனர்.
![]()
|
வழிவகுக்கும்
மேலும், அவர்கள் கூறியுள்ளதாவது: கடந்த 2021 சட்டசபை தேர்தலில், 15 சதவீதம் சிறுபான்மை ஓட்டுகள் தி.மு.க.,வுக்கு முழுமையாக கிடைத்தும், அ.தி.மு.க., -- பா.ஜ., கூட்டணி 40 சதவீத ஓட்டுகளை பெற்றது. இதற்கு ஹிந்து ஓட்டு வங்கியே காரணம். ஹிந்து ஓட்டு வங்கி உள்ள கொங்கு மண்டலம் உள்ளிட்ட பகுதிகளில்தான் அ.தி.மு.க., கூட்டணி அதிகம் வென்றது.
தினகரனின் அ.ம.மு.க.,வால் 20-க்கும் அதிகமான தொகுதிகளில் அ.தி.மு.க., வெற்றி வாய்ப்பை இழந்தது. எனவே, பா.ஜ., இல்லாமல் வென்று விடலாம் என்றோ, சசிகலா, பன்னீர்செல்வத்தை சேர்க்காமல் வென்று விடலாம் என்றோ நினைக்க வேண்டாம்.
கடந்த 1977 முதல் அ.தி.மு.க., சந்தித்த அனைத்து தேர்தல்களின் புள்ளி விபரங்களை காட்டிய பா.ஜ., மேலிடப் பிரதிநிதிகள், தி.மு.க.,வுக்கு சிறுபான்மை ஓட்டுகள் எப்போதுமே கிடைத்ததில்லை. எனவே, அ.தி.மு.க., ஒரே கட்சியாக போட்டியிடாமல், மூன்றாக இருந்தால், அது தி.மு.க.,வின் வெற்றிக்குதான் வழிவகுக்கும்.
காலம் இருக்குது
தி.மு.க., கூட்டணிக்கு அதிக எம்.பி.,க்கள் கிடைத்தால், அது ராகுல் பிரதமராகவே உதவும். மத்தியிலும் தி.மு.க.,வுக்கு அதிகாரம் கிடைத்து விட்டால், அ.தி.மு.க.,வின் நிலை மோசமாகிறதோ இல்லையோ, பழனிசாமியின் நிலை மோசமாகி விடும். தான் விரும்பும் ஒருவரை அ.தி.மு.க., பொதுச்செயலராக்க தி.மு.க., தயங்காது. இவ்வாறு அவர்கள், பழனிசாமி தரப்புக்கு பாடம் எடுத்துள்ளனர்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட பழனிசாமி தரப்பினர், 'அ.தி.மு.க.,வை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம். தேர்தலுக்கு இன்னும் காலம் இருக்கிறது. காலம் வரும்போது முடிவெடுத்து கொள்ளலாம்' எனக் கூறியதாக, பா.ஜ., வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.