சென்னை-'அரசு மருத்துவமனை நோயாளிகளிடம், அறுவை சிகிச்சைக்கு முன், அதனால் ஏற்படும் சாதக, பாதகங்களை தெரிவிக்க வேண்டும்' என, அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கான வழிகாட்டு நெறிமுறையில் கூறப்பட்டு உள்ளது.

சென்னை, வியாசர்பாடியைச் சேர்ந்தவர் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, 17. கால் மூட்டு அறுவை சிகிச்சைக்கு பின், டாக்டர்களின் கவனக்குறைவு காரணமாக உயிரிழந்தார்.
கையேடு
மேலும், அரசு டாக்டர்கள், அறுவை சிகிச்சைக்கு முன், நோயாளிகள் மற்றும் உறவினர்களிடம், அதனால் ஏற்படும் சாதக பாதகங்களை தெரிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதைத் தொடர்ந்து, அரசு அறுவை சிகிச்சை டாக்டர்களுக்கான பயிலரங்கம் சமீபத்தில் நடந்தது. இதில், டாக்டர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய கையேடு வழங்கப்பட்டது.
அப்போது, டாக்டர்களும் தங்களது பணிச்சுமை, தினசரி மேற்கொள்ளப்படும் அறுவை சிகிச்சை எண்ணிக்கை போன்றவற்றை, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியனிடம் தெரிவித்தனர்.
அதையடுத்து, அறுவை சிகிச்சை நெறிமுறைகள் அடங்கிய கையேட்டில், கூடுதல் தகவல்கள் சேர்க்க, அரசு திட்டமிட்டுள்ளது.
மன அழுத்தம்
இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:
ஏற்கனவே வழங்கப்பட்ட கையேட்டில், சர்க்கரை அளவு, 200க்குள், ரத்த அழுத்தம் அளவு 150/90 என்ற அளவில் இருக்க வேண்டும். நோயாளி அல்லது அவரது உறவினருக்கு, அறுவை சிகிச்சையின் சாதக பாதகங்களை தெரிவிக்க வேண்டும்.
நோயாளிக்கு மற்ற இணை நோய்கள் இருந்தால், அத்துறை நிபுணர்களுடன் ஆலோசித்து, அறுவை சிகிச்சை செய்வதற்கான ஒப்புதல் பெற வேண்டும்.
மேலும், அறுவை சிகிச்சை அரங்கில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது. காலையில் முறையாக உணவு உட்கொள்வதுடன், முன்கூட்டியே மருத்துவமனைக்கு வந்து விட வேண்டும்.

மன அழுத்தம் போன்ற பிரச்னைகள் ஏதுமின்றி, அறுவை சிகிச்சையை முறையாக மேற்கொள்ள வேண்டும்.
இதுபோன்ற வழிகாட்டுதல்கள், துறை வாரியாக அளிக்கப்பட்டுள்ளன.
இவற்றில், மேலும் சிலவற்றை சேர்க்க, அரசு திட்டமிட்டுள்ளது. அவை சேர்க்கப்பட்டு, ஓரிரு வாரங்களில், டாக்டர்கள் அனைவருக்கும் கையேடு வழங்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.