தமிழக காங்., தலைவர் அழகிரி அறிக்கை:
ஜவஹர்லால் நேரு, பிரதமராக இருந்த காலத்தில், பாதுகாப்பு, விவசாய துறைகள் புறக்கணிக்கப்பட்டதால், நாடு பெரும் அவமானத்தை சந்தித்ததாக, ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை, தமிழக கவர்னர் ரவி கூறிஇருக்கிறார். குறைந்த பட்ஜெட் தொகையை வைத்து, நாட்டின் வளர்ச்சிக்கு அடித்தளமிட்ட காரணத்தால், 'நவ இந்தியாவின் சிற்பி' என, நேருவை உலகமே பாராட்டியது.
நேரு காலத்தில் நம் ராணுவம் பலமாக இருந்து இருந்தால், 1962 சீன போரில், நாம் பின்னடைவை சந்தித்திருக்க வேண்டாமே!
த.மா.கா., தலைவர் வாசன் பேட்டி:
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத தி.மு.க., அரசு, மக்களுக்கு ஏமாற்றத்தை தந்துள்ளது. தி.மு.க.,வுக்கு எதிர்மறை ஓட்டுகள் அதிகரித்து வருகின்றன; அது, எங்கள் கூட்டணிக்கு ஆதரவாக மாறும். தமிழகத்தில், அ.தி.மு.க., தலைமையிலான கூட்டணி ஆட்சியை கைப்பற்றும். லோக்சபா தேர்தலில், பா.ஜ., வென்று, மீண்டும் ஆட்சியை பிடிக்கும்.

இப்ப ராஜ்யசபா எம்.பி.,யா இருக்கிற வாசன், அடுத்து மத்திய அமைச்சர் புரமோஷனை எதிர்பார்க்கிறது நல்லாவே தெரியுது!
தமிழக சட்டசபை காங்., மற்றும் பொதுக்கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை பேட்டி:
தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்கும் போது, தமிழகத்தின் நிதி ஆதாரம் ஜீரோ; லட்சக்கணக்கான கோடி ரூபாய் கடன். அ.தி.மு.க., ஆட்சியில் எதற்காக கடன் வாங்கி, என்ன நிர்வாகம் செய்தனர் என்றே தெரியவில்லை. 10 ஆண்டுகளாக தமிழகத்தில், 'இருண்ட கால' ஆட்சி நடந்தது என்றே சொல்லலாம்.
'விடியல் ஆட்சி'யில், கடன்கள் எல்லாத்தையும் அடைச்சிட்டீங்களா என்ன?
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் செம்மலை அறிக்கை:
சட்டசபை காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமிக்கு பதில் சொல்வதாக நினைத்து, தேவை இல்லாமல் மூக்கை நுழைத்திருக்கிறார். தி.மு.க., ஆட்சியில், மருத்துவமனைகளில் மருந்துகள் தட்டுப்பாடு உள்ளது என்பதே, எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டு. இதை, அந்த துறையே ஒப்புக் கொண்ட பிறகு, இவர் சம்பந்தமில்லாமல், அரசுக்கு ஏன் வக்காலத்து வாங்க வேண்டும்.

'கூட்டணி தர்மத்தின்படி' இப்படி வக்காலத்து வாங்குனா தான், 'மேல போட்டு' குடுப்பாங்க!
தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிக்கை:
'ஹிந்துத்வா என்பது, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ்., கும்பலின் அரசியல். ஹிந்துத்துவாவுக்கு மாற்று சொல் தான் சனாதனம். சங் பரிவாரின் முகமூடி அரசியல் தான் ஹிந்துத்துவா' என்று திருமாவளவன் கூறிஉள்ளார். சனாதன எதிர்ப்பு என்பது, கட்டப்பஞ்சாயத்து கும்பலின் அரசியல். சட்டத்திற்கு அடங்க மறுத்து, அத்துமீறி சனாதன எதிர்ப்பு என்ற முகமூடியோடு நடத்தப்படும் கட்டப்பஞ்சாயத்து கும்பலின் வெறுப்பு அரசியல்.

'முள்ளை முள்ளால் தான் எடுக்கணும்' என்பது போல, இந்த மாதிரி பதிலடிகள் தான், பா.ஜ.,வின் வேகமான வளர்ச்சிக்கு காரணம்!