புதுடில்லி :'' அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது'' என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
அரசியல்சாசன தின விழாவை முன்னிட்டு நடந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: மும்பை பயங்கரவாத தாக்குதல் நினைவு தினம் இன்று.கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு , அரசியல்சாசனத்தையும் குடிமக்களின் உரிமையையும் கொண்டாடிய போது, மனித குலத்தின் எதிரிகள் இந்தியாவின் மீது பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இன்றைய சர்வதேச சூழலில், ஒட்டுமொத்த உலகத்தின் பார்வை இந்தியா மீது திரும்பி உள்ளது. அதிவேகமாக இந்தியா வளரும் போது, அதிவேகமாக பொருளாதாரமாக இந்தியா உள்ள நிலையில், ஒட்டு மொத்த உலகமும் இந்தியாவை பெரிய எதிர்பார்ப்புடன் பார்த்து வருகின்றன.

இந்தியா முன்பு புதிய வாய்ப்புகள் வந்து கொண்டுள்ளன. அனைத்து தடைகளையும் தாண்டி இந்தியா முன்னேறி வருகிறது. இன்னும் ஒருவாரத்தில் ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவியில் இந்தியா அமர உள்ளது. நாம் அனைவரும் இந்தியாவின் மதிப்பை உலக நாடுகள் முன் உயர்த்தி, பங்களிப்பை கொண்டு வர வேண்டும்.
அரசியலமைப்பின் முன்னுரையில் உள்ள 'நாங்கள் மக்கள் என்பது, இந்தியாவை ஜனநாயகத்தின் தாயாக மாற்றிய உறுதிமொழி மற்றும் நம்பிக்கையாக உள்ளது. சரியான நேரத்தில் அனைவருக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்காக துவங்கப்பட்டுள்ள மின்னணு முயற்சிகள் போன்ற பல நடவடிக்கைகளை நீதித்துறை மேற்கொண்டு வருகிறது.
ஏழைகளுக்கு ஆதரவான கொள்கைகள், நாட்டின் ஏழைகள் மற்றும் பெண்களை கைதூக்கிவிடுவதற்கு உதவுகிறது. சாமானிய மக்களுக்காக சட்டங்கள் எளிமைபடுத்தப்பட்டுள்ளன. உரிய நேரத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்ய நீதித்துறை நடவடிக்கை எடுக்கிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.