லண்டன்: பிரிட்டனில் நடந்த சர்வதேச குச்சிப்புடி நடன திருவிழாவில், பிரதமர் ரிஷி சுனக்கின் மகள் அனுஷா சுனக்கின்(9) குச்சிப்பிடி நடனம் அனைவரையும் கவர்ந்தது.
பிரிட்டனின் 57 வது பிரதமராக இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்(42) சில மாதங்களுக்கு முன் பதவியேற்று கொண்டார். அந்நாட்டில் மிக உயர்ந்த பதவியை வகிக்கும் முதல் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் என்ற பெருமையுடன், கடந்த 200 ஆண்டுகளில் பிரதமராக பதவியேற்றவர்களில் மிக இளையவர் என்பதும் உள்ளது.
அங்கு பிரதமர் பதவியில் அமர்ந்துள்ள முதல் ஹிந்துவான இவர், தனது மேஜையில் விநாயகர் படத்தையும் வைத்துள்ளார். வழக்கமாக பிரிட்டன் பிரதமர்கள் வசிக்கும் வீட்டில் குடியேறாத இவர், அரசின் செலவுகளை குறைக்கும் வகையில் சிறிய குடியிருப்பு ஒன்றில் வசித்து வருகிறார்.

இந்நிலையில், லண்டனில் சர்வதேச குச்சிப்புடி திருவிழா-2022 என்ற நடன திருவிழா நடக்கிறது. இந்த விழாவில் 4 முதல் 85 வயது வரை உள்ளவர்கள் பங்கேற்பார்கள். இசைக்கலைஞர்கள், முதியவர்கள் கொண்ட நடன குழுவினர் , மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்டோரும் பங்கேற்கும் இந்த விழாவில், ரிஷி சுனக்கின் மகள் அனுசாவும், குழந்தைகளுடன் இணைந்து குச்சிப்புடி நடனமாடினார்.
தாயார் அக்ஷதா மூர்த்தி, ரிஷி சுனக்கின் பெற்றோரும் இந்த விழாவில் பங்கேற்று குச்சிப்புடி நடனத்தை கண்டு ரசித்தனர்.
