திருநெல்வேலி: கவர்னர் ரவி மற்றும் தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலையை திமுக.,வை சேர்ந்த ஆர்எஸ் பாரதி ஒருமையிலும், ஏக வசனத்திலும் பேசினார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஆர்எஸ் பாரதிக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
திருநெல்வேலியில் நடந்த ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டத்தில் ஆர்எஸ் பாரதி பேசியதாவது:
பாஜ., தமிழகத்தில் இனி ஆர்ப்பாட்டம் செய்தால் அவர்களை சிறையில் அடைக்க வேண்டும். ஒரு நாள் சிறையில் இருந்தால் , அதன் பிறகு கட்சியே வேண்டாம் என ஓடிவிடுவார்கள். ஒரு அறையில் இருப்பதற்கு கூட முடியாத கட்சி தான் பா.ஜ.,
இனிமேல் ஆர்ப்பாட்டம், போராட்டம் நடத்தினால், 2 நாள் சென்ட்ரல் சிறையில் அடையுங்கள். ஒருவனும் இருக்க மாட்டான். அடுத்து ஒரு போராட்டம் நடத்தினால் உங்கள் அதிகாரம் தான். அடுத்த நாள் காலை வரையில் சிறையில் வைத்தால், ஒரு நாள் இரவு கூட தங்க மாட்டார்கள்.

கவர்னருக்கு சம்பளம் கொடுக்கிறது நமது வரிப்பணத்தில். அவர் டீ குடிப்பது முதல் அவரது வீட்டில் சட்டையை தூய்மைபடுததும் வரை நடப்பது நமது வரிப்பணத்தில் தான். நமது வரிப்பணத்தில், நமது செலவில் அமர்ந்து இருக்கும் கவர்னர், ராஜ்பவனில் கூட்டம் நடத்தி திராவிடம் என்ற நாடே இல்லை இல்லை என்கிறார். அவரும் ஐபிஎஸ்., என்பதால். (அப்போது கவர்னரை அவன், என்கிறான் என குறிப்பிட்டு ஒருமையில் பேசினார்.)
ஐபிஎஸ் படித்தவர்களில் பலர் இப்படி மெண்டலாக இருப்பார்கள் என நினைக்கிறேன். ஒருவர் அண்ணாமலை. ஐபிஎஸ் அதிகாரிகள் அனைவரையும் கூறவில்லை. ஐபிஎஸ் வேலையை விட்டு விட்டு அரசியலுக்கு வருபவர்கள் மெண்டலாக உள்ளனர்.
இது மோசமான கட்சி. தி.மு.க.,வுக்கு யாரேனும் துரோகம் செய்தால் விளைவு வேறு மாதிரி இருக்கும். அவர்கள் ஒன்று நீதிமன்றத்திற்கு போக வேண்டும் அல்லது கை, கால் இல்லாமல் போக வேண்டும்.
அதிமுக ஆட்சி காலத்தில் கிராம பஞ்சாயத்துகளில் போடப்பட்ட எல்இடி பல்புகளில் ஊழல் நடந்துள்ளது. 20 வாட்ஸ் பல்லை 5 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கி உள்ளனர். அதில் 800 கோடி ரூபாய் வரை ஊழல் நடந்துள்ளது.
தமிழகத்தில் போதை பொருட்களை விற்பதே பா.ஜ.,வினர் தான். அண்ணாமலை தலைவரான பிறகு, அனைத்து சமூக விரோதிகளும் பா.ஜ.,வில் உறுப்பினர்களாகி விட்டனர். முதல்வர் ஸ்டாலினை, பொம்மை முதல்வர் என்கிறார்.(என்கிறான் என ஒருமையில் பாரதி பேசினார்) இனி மேல் இப்படி பேசினால் வேறு வகையான ரியாக்சனை பழனிசாமி சந்திக்க வேண்டியிருக்கும்.
இவ்வாறு ஆர்எஸ் பாரதி பேசியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பலரும் அவருக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.