ஈரோடு: ஈரோட்டில் சட்டசபை தொகுதி பணிக்குழுவில், பிரச்னைகளை தெரிவிக்க, எம்.எல்.ஏ., வலியுறுத்தினார்.
ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு (பேட்டியா) செயற்குழு கூட்டம் தலைவர் ராஜமாணிக்கம் தலைமையில் நடந்தது. ஈரோடு பைனான்ஸ் அசோசியேசன் தலைவர் முத்துசாமி வரவேற்றார். பொதுச் செயலாளர் ரவிசந்திரன், அறிக்கை படித்தார்.
ஈரோடு கிழக்கு காங்.,--- எம்.எல்.ஏ., திருமகன் ஈவெரா பேசியதாவது: சட்டசபை தேர்தலுக்கு முன், பேட்டியா சார்பில் என்னிடம் வழங்கிய கோரிக்கை குறித்து சட்டசபையில் பேசினேன். தொடர் முயற்சியால் சில பணிகள் நடந்து வருகிறது.
ஈரோட்டில் சட்டசபை தொகுதி பணிக்குழு என, 12 பேர் கொண்ட அமைப்பை ஏற்படுத்தி, அதில், பேட்டியா அமைப்பினரையும் இணைக்க உள்ளேன். மாநகராட்சி பிரதான கட்டடத்தில் என் அலுவலகம் உள்ளது.
அங்கு வந்து இக்குழுவினர் பணி செய்யலாம். இக்குழு உறுப்பினர்கள் என்ற முறையில் அதிகாரிகளை நீங்களே சென்று பேசி, பிரச்னை, கோரிக்கைகளுக்கு தீர்வு காணலாம். இவ்வாறு அவர் பேசினார். நிர்வாகிகள் முருகானந்தம், சிவகுமார், ஜெப்ரி, நுார்சேட், செல்வராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.
மாநகரில் சுமை துாக்கும் மாட்டு வண்டிகளை மாற்றி, மினிடோர் அல்லது வேன்களை மட்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். சென்னிமலை சாலை, பழநி சாலை, முத்துார் சாலை, கரூர் சாலை போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளதால், புறவழிச்சாலையின் நான்கு வழிச்சாலை சந்திப்பில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் பேட்டியா செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.