சென்னிமலை: சிப்காட் ஆலை ரசாயன கழிவால், குளத்து நீர் செந்நிறமானது, விவசாயிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
சென்னிமலை யூனியன் பகுதியில், 2,800 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டையில், 150க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இங்கு செயல்படும் தோல், சாய ஆலைகளால்தான் நீர், காற்று மாசடைந்துள்ளது. இந்நிலையில் ஈங்கூர் ஊராட்சி செங்குளம் பகுதி இரும்பு உருக்காலையால், 18 ஏக்கர் பரப்பிலான குளத்து நீர் நிறம் மாறியுள்ளதாக, மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
ஆலையில் தேக்கி வைத்த கழிவு நீரை, மழை பெய்தபோது வெளியேற்றியதால், குளத்து நீர் செந்நிறமாகி விட்டது. இதை சுற்றியுள்ள விவசாய கிணறுகளிலும் நீர் மாசடைந்துள்ளது என்று தெரிவித்தனர். புகார் எதிரொலியாக மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், குளத்தில் தேங்கிய கழிவுகளை ஆய்வு செய்து, மாதிரிகளை பரிசோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர். விவசாயிகளுக்கு, உரிய இழப்பீடு வழங்குவதோடு, ஆலை நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஆலை நிர்வாகம் கூறியதாவது: எங்கள் ஆலையில் கழிவுகள் பத்திரமாக சேகரிக்கப்படுகிறது. குளத்துக்கு வரும் நீர்வழிப்பாதையில், வேறு ஆலையின் கழிவு, மழை நீருடன் வந்திருக்கலாம். இதற்கும் எங்களது ஆலைக்கும் சம்மந்தமில்லை. இவ்வாறு கூறினர். குளத்து நீரின் மாதிரி ஆய்வு முடிவில், என்ன மாதிரியான ரசாயன கலப்பு என்பது தெரிய வரும். அதன் அடிப்படையில் நடவடிக்கை இருக்கும் என தெரிகிறது.