ஈரோடு: ஈரோடு, பெருந்துறை சாலை, பரிமளம் மஹாலில், 150 அரங்குகளுடன் யுனைடெட் அக்ரி அன்ட் டயரி டெக்-2022 சார்பில் விவசாயம் மற்றும் பால் உற்பத்தி கண்காட்சி, ஆறாவது ஆண்டாக நேற்று துவங்கியது. ஈரோடு மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி, ஈரோடு மஞ்சள் வணிகர்கள் மற்றும் குடோன் உரிமையாளர் சங்க தலைவர் ரவிசங்கர் குத்து விளக்கேற்றி துவக்கி வைத்தனர்.
கண்காட்சியில் வேளாண்மை சார்ந்த தொழில் நுட்ப சாதனங்கள், வேளாண்மை மற்றும் தோட்டக்கலை துறை சார்ந்த புத்தகங்கள், தொழில் நுட்பம் அல்லாத பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.
விவசாயம், பால் உற்பத்தி சார்ந்த தொழில் நுட்ப சாதனங்கள், விதை, உரங்கள் இடம் பெற்றுள்ளன. 27ம் தேதி வரை காலை, 10:00 மணி முதல் இரவு, 7:00 மணி வரை கண்காட்சி நடக்கிறது. அனுமதி இலவசம்.
கண்காட்சி குறித்து நிர்வாக இயக்குனர் பாக்யராஜ் கூறியதாவது: தற்போது சந்தையில் உள்ள நவீன வேளாண் தொழில் நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்த முடியும் என்பதை வெளிப்படுத்துவதே கண்காட்சியின் நோக்கமாகும். கூடுதல் விபரம் அறிய, -93600 93603, 86680 08056 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.