பா.ஜ., கட்சி அலுவலகம் திறப்பு
முத்துார்: வெள்ளகோவில் வடக்கு ஒன்றிய பா.ஜ., சார்பில், முத்துாரில் பா.ஜ., அலுவலகம் திறப்பு விழா நடந்தது. ஒன்றிய தலைவர் கார்த்திராஜ் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொது செயலாளர் முருகானந்தம், திருப்பூர் தெற்கு மாவட்ட தலைவர் மங்களம் ரவி கலந்து கொண்டனர்.
கட்சி கொடியேற்றி அலுவலகத்தை திறந்து வைத்தனர். மாவட்ட பொது செயலாளர் வெள்ளகோவில் ஜகன், மாநில, மாவட்ட, ஒன்றிய நகர நிர்வாகிகள் மகளிரணி நிர்வாகிகள் என, 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
மாற்றுத்திறனாளிகள் தினம்
தாராபுரம்: மாற்றுத்திறனாளிகள் தினத்தை ஒட்டி, தாராபுரத்தை அடுத்த குண்டடம் வட்டார வள மையத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான பண்பாட்டு நிகழ்வு நேற்று நடந்தது. குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன், திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலசுந்தரி துவக்கி வைத்தனர். நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி மாணவர்களின் நடனம், திருக்குறள் ஒப்பித்தல், யோகா, பேச்சு மற்றும் மாறுவேட போட்டி உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்தன. பங்கேற்ற குழந்தைகளுக்கு பரிசும் வழங்கப்பட்டது.
'தாவிய' ம.தி.மு.க.,வினர்
தாராபுரம்: தாராபுரத்தில், அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி ஆகியோர் முன்னிலையில், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்பட, 50க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர், தி.மு.க.,வில் நேற்று இணைந்தனர். திருப்பூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் பத்மநாபன் தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர் தெய்வசிகாமணி தலைமையில் ம.தி.மு.க.,வை சேர்ந்த, 50க்கும் மேற்பட்டோர், தி.மு.க.,வில் சேர்ந்தனர். அதேபோல் உழவர் உழைப்பாளர் கட்சி ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியினர் தி.மு.க.வில் சேர்ந்தனர். நிகழ்ச்சியில், தாராபுரம் ஒன்றிய குழு தலைவர் செந்தில்குமார் உள்பட, 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.