புதுடில்லி: ''நீதித்துறை, மக்களை அணுக வேண்டியது அவசியம். மாறாக, மக்கள் தான் அணுக வேண்டும் என எதிர்பார்க்கக்கூடாது'', என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டிஓய் சந்திரசூட் கூறியுள்ளார்.
அரசியல்சாசன தின விழாவில் அவர் பேசியதாவது: பன்முகத்தன்மை கொண்ட நமது நாட்டில், நீதித்துறை எதிர்கொள்ளும் மிக முக்கியமான சவாலாக, அனைவருக்கும் நீதி கிடைப்பது மாறி உள்ளது. நீதி கிடைக்க செய்வதில், நீதித்துறை பல விஷயங்களை அறிமுகப்படுத்தி வருகிறது.
உச்சநீதிமன்றம், டில்லியின் திலக் மார்க்கில் அமைந்திருந்தாலும், அது நாட்டு மக்கள் அனைவருக்குமான உச்சநீதிமன்றம். வழக்கறிஞர்கள், தங்கள் இடத்தில் இருந்து வழக்குகளை வாதாட மெய்நிகர் அணுகல் சாத்தியமாக்கியுள்ளது. வழக்குகளை பட்டியலில தொழில்நுட்பத்தை பயன்படுத்த தலைமை நீதிபதியாக நான் விரும்புகிறேன்.

மக்களை நீதித்துறை அணுக வேண்டியது முக்கியம். மாறாக, நீதித்துறையை மக்கள் அணுக வேண்டும் என்பது எதிர்பார்க்கக்கூடாது. சட்டத்துறையில், விளிம்பு நிலை மக்களின் பிரதிநிதித்துவம் அதிகரிக்கப்பட வேண்டும். இவ்வாறு தலைமை நீதிபதி சந்திரசூட் பேசினார்.
அனைத்து அரசு அமைப்புகளிலும் குறை
உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நேற்று(நவ.,26) நடந்த அரசியல் சாசன தின விழாவில் தலைமை நீதிபதி சந்திரசூட் பேசியதாவது: உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற நீதிபதிகளை தேர்வு செய்யும் அமைப்பான கொலீஜியம் மீது விமர்சனம் வைக்கப்படுகிறது.
அரசியலமைப்பு ஜனநாயகத்தில் கொலீஜியம் உள்பட அனைத்து அமைப்புகளும் முற்றிலும் சரியானது என்று எதுவுமில்லை. கொலீஜியம் உட்பட அனைத்து அரசு அமைப்புகளிலும் குறை உள்ளது. ஆனால், அரசியலமைப்பு சட்டத்தின்படி உருவாக்கப்பட்டுள்ள கட்டமைப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டு பணியாற்றி வருகிறோம்.
கொலீஜியத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து நீதிபதிகளும், அரசியல் சாசனத்தை நிலைநாட்ட விசுவாசமான வீரர்களை போன்று செயலாற்றுகிறோம். இதில் குறைபாடுகள் உள்ளதாக கூறப்படும்போது இதற்கான தீர்வை நமது கட்டமைப்புக்குள்ளேயே தேடி கொள்ள வேண்டும். அதிக சம்பவளம் அளித்து சிறந்த நீதிபதிகளை கொண்டு வருவதால் கொலீஜியத்தை சீரமைத்து விட முடியாது.
நீதிபதிகளுக்கு எவ்வளவு அதிகமாக சம்பளம் அளித்தாலும், அதை மூத்த வழக்கறிஞர்கள் ஒரே நாளில் சம்பளமாக பெற்று விடுவார்கள். ஆனால், நீதிபதியாக ஆவது என்பது மனசாட்சியின் அழைப்பாகும். சிறந்த சமூகத்தை உருவாக்கும் சக்தி நீதிபதிகளிடம் தான் உள்ளது எனு இளம் வழக்கறிஞர்கள் மனதில் பதிய வைப்பது தான் முக்கியமானதாகும். அப்போது தான் நல்ல மனிதர்கள் நீதிபதிகளாக வருவார்கள்.
இளம் வழக்கறிஞர்கள் நீதிபதிகளாவதற்கு வழிகாட்டினால் தான் நீதித்துறையில் சிறந்த மனிதர்கள் இருப்பார்கள். நீதித்துறை அலுவலகங்களை இளம் வழக்கறிஞர்கள் அணுகுவது எளிதாக்கப்பட வேண்டும். சமூகத்தின் புதிய மாற்றங்களுக்கு ஏற்ப அரசியலமைப்பு சட்டம் மூலம் ததொடர்ந்து தீர்வு காணப்பட்டு வருகிறது.
நீதித்துறை மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை என்பது நீதமன்ற செயல்பாடுகளை நீதிபதிகள் எப்படி நடத்தி செல்கிறார்கள் என்பதாகும். முக்கியமான தீர்ப்புகளை வெளியிடுவது மட்டும் நீதிமன்றங்களின் பணியல்ல. மக்களுக்கு அவர்களின் வழக்கு முறையாக விசாரிக்கப்பட வேண்டும் என்பது தான் முக்கியமானதாகும். இவ்வாறு தலைமை நீதிபதி பேசினார்.