ஆமதாபாத்: குஜராத்தில் பிரிவினைவாத எதிர்ப்பு பிரிவு உருவாக்கப்படும்; பொது சிவில் சட்டம் அமல்படுத்துவோம் என பா.ஜ., உறுதி அளித்துள்ளது.
குஜராத் சட்டசபைக்கு டிச.,1 மற்றும் 5 தேதிகளில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல்கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இச்சூழ்நிலையில் , பா.ஜ.,வின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா வெளியிட்டார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:
* பிரிவினைவாத எதிர்ப்பு படை உருவாக்கப்படும்.
* பொது சிவில் சட்டம் உருவாக்கப்படும்
* 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.
* கிண்டர்கார்டன் முதல் உயர்கல்வி வரை பெண்களுக்கு இலவச கல்வி
*ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீடானது ரூ.5 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாக அதிகரிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
*9 முதல் 12ம் வகுப்பு மாணவிகளுக்கு இலவச சைக்கிள்
*பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த மாணவிகளுக்கு இலவச எலெக்ட்ரிக் மோட்டார் சைக்கிள்
*பெண்கள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயணம்
*அக்னிபத் திட்டத்தில் தேர்வாகும் பெண்களுக்கு ஒரு முறை நிதியுதவியாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்
*ரேசன் மூலம் 4 கிலோ சமையல் எண்ணெய், ஒரு கிலோ பருப்பு இலவசமாக வழங்கப்படும்.
*தெற்கு குஜராத் மற்றும் சவுராஷ்டிராவில் இரண்டு மெகா கடல் உணவு பூங்கா அமைக்கப்படும்.

பிறகு நட்டா கூறுகையில், தனியார் மற்றும் பொதுச்சொத்துகளை சேதப்படுத்துபவர்களை கண்டுபிடிக்க புதிய சட்டம் கொண்டு வரப்படும். இதன் மூலம் தேச விரோத சக்திகள் அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும்.
குஜராத்தில் பொது சிவில் சட்டம் அமல்படுத்துவது குறித்து அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையை முழுமையாக நிறைவேற்றுவோம். இவ்வாறு நட்டா கூறினார். இந்த நிகழ்ச்சியில், முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் மாநில தலைவர் சிஆர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.