
சுவைக்காகவும் மருத்துவ குணங்களுக்காகவும் ஆப்பிள் உலகம் முழுவதும் விரும்பி உண்ணப்படும் பழமாக விளங்குகிறது.

ஆயிரக்கணக்கான ஆண்டு பராம்பரியம் கொண்ட ஆப்பிள் பழம் எல்லாவிதமான குளிர்ப் பிரதேசங்களிலும் விளையும் என்றாலும் இந்தியாவைப் பொறுத்தவரை ஜம்மு காஷ்மீரில்தான் அதிகம் விளைகிறது.

நாட்டில் நுகரப்படும் 75 சதவீத ஆப்பிள்கள் அங்கு இருந்து வருபவைதான் காஷ்மீர் ஆப்பிள் இந்தியாவில் மட்டுமின்றி உலகம் முழுவதுமே விரும்பப்படுகிறது.ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் இடத்திலும் ஆப்பிள் முதல் இடத்தை வகிக்கிறது.

ஆப்பிள் மற்ற பழங்களைப் போல பெரும்பாலும் சமைக்கப்படாமலேயே சாப்பிடப்பட்டாலும், அது பல பதப்படுத்தப்பட்ட உணவு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. ஆப்பிளைக் கொண்டு பழரசங்கள் தயாரிக்கப்படுகின்றன.

ஸ்ரீ நகரில் காய்கறிகள் விலையை விட ஆப்பிள் விலை மிகவும் குறைவு.மூன்று கிலோ ஆப்பிள் நுாறு ரூபாய் என்று கூவி கூவி விற்கின்றனர்.ஆனால் அங்கு இருந்து பல கைகள் மாறி இங்கே நம் கைக்கு வரும்போது அதன் விலை எங்கோ போய்விடுகிறது.இதன் காரணமாக இப்போதும் ஆப்பிள் சாப்பிடுபவர்கள் பணக்காரர்களாகவே இங்கு பார்க்கப்படுகின்றனர்.

காஷ்மீரில் விளையும் ஆப்பிள்கள் இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதுகுறித்த விவரங்களைத் தோட்டக்கலைத் துறை செயலாளரான மன்சூர் அகமது வெளியிட்டுள்ளார். அதன்படி, நடப்பு பருவத்தில் மொத்தம் 10.78 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான ஆப்பிள்கள் ஜம்மு காஷ்மீரிலிருந்து இந்தியாவின் மற்ற இடங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.2018ஆம் ஆண்டின் இதே காலத்தில் அங்கிருந்து எடுத்துச் செல்லப்பட்ட ஆப்பிள்களின் அளவு 11.74 லட்சம் மெட்ரிக் டன்களாகும். இந்த ஆண்டில் ஆப்பிள்களை எடுத்துச் செல்ல மொத்தம் 77,000 லாரிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆப்பிள் கொள்முதலைப் பொறுத்தவரையில், இதுவரையில் 4.85 லட்சம் ஆப்பிள் பெட்டிகளை அரசு கொள்முதல் செய்துள்ளது. இவற்றின் மதிப்பு ரூ.32 கோடியாகும்.
-எல்.முருகராஜ்