ஈரோடு: மொடக்குறிச்சியில் தி.மு.க., - பா.ஜ., மோதல் தொடர்பாக, இரு தரப்பை சேர்ந்த, 10 பேர் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி பேரூராட்சியில், நிதி முறைகேடு நடந்துள்ளது. அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கடந்த, 24ம் தேதி மொடக்குறிச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில், பா.ஜ., சார்பில் போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.தி.மு.க.,வினர் புகாரின்படி, பேரூராட்சி ஊழியர் மூலம் போஸ்டரை கிழிக்கும் பணி நடந்தது.
அப்போது இரு கட்சியினரிடையே வாக்குவாதம், மோதல் ஏற்பட்டது. ஈரோடு தெற்கு மாவட்ட உள்ளாட்சி பிரிவு தலைவரும், பேரூராட்சி பா,ஜ., கவுன்சிலர் சத்யா தேவியின் கணவருமான சிவசங்கருக்கு ரத்தக்காயம் ஏற்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்தார்.
சிவசங்கர் புகாரின்படி, மொடக்குறிச்சி போலீசார், தி.மு.க.,வை சேர்ந்த மொடக்குறிச்சி பேரூராட்சி தலைவி செல்வாம்மாள், அவரது கணவரான தி.மு.க., செயலாளர் சரவணன், கவுன்சிலர்கள் மகன்யா, தனலட்சுமி, பிரதீபா, கார்த்திகேயன், கண்ணுசாமி மற்றும் தி.மு.க., பிரமுகரான தமிழரசு, தி.மு.க., கிளை செயலாளர் ஆனந்தராஜ் ஆகியோர் மீது தகாத வார்த்தை பேசுதல், கையால் தாக்குவது, கொலை மிரட்டல் விடுத்தல், அனுமதியின்றி கூடுவது ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதேபோல் கவுன்சிலர் மகன்யா புகாரின்படி, சிவசங்கர் மீது பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு, ஜாதி பெயரை கூறி திட்டியது, தகாத வார்த்தை பேசியது, கைகளால் தாக்கியது, அனுமதியின்றி கூடியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேசமயம் யாரும் கைது செய்யப்படவில்லை.