இந்தியாவின் டாப் 50 கோடீஸ்வரர்களில் ஒருவர் ஸ்ரீதர் வேம்பு. தொழில்நுட்ப நிறுவனமான சோஹோவைத் தொடங்கி நடத்தி வருகிறார். இவரது சொத்து மதிப்பு சுமார் ரூ.30 ஆயிரம் கோடி. இவர் தனது தொழிலை விரிவுப்படுத்தினால், மத்திய மற்றும் கிழக்கு உ.பி.,யில் உள்ள நகரங்களுக்கு செல்வேன் என்றும், அதற்காக ஹிந்தி பயின்று வருவதாகவும் கூறியுள்ளார்.
தஞ்சாவூரை பூர்விகமாக கொண்ட ஸ்ரீதர் வேம்பு, மெட்ராஸ் ஐஐடியில் இளநிலை பொறியியலும், அமெரிக்காவின் நியூஜெர்சியில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் டாக்டர் பட்டமும் பெற்றவர். கலிபோர்னியாவிலேயே ஒயர்லெஸ் பொறியாளராக பணியைத் தொடங்கிய இவர், 1996ல் தனது சகோதரர்களுடன் இணைந்து நெட்வொர்க் சாதனங்கள் வழங்குபவர்களுக்காக அமெரிக்காவிலேயே மென்பொருள் நிறுவனம் ஒன்றைத் தொடங்கினார். 2009ல் இது சோஹோ என பெயர் மாற்றம் கண்டது. சாஸ் (SaaS) மென்பொருள் சேவையினை தற்போது வழங்கி வருகிறது.
சர்வதேச மென்பொருள் நிறுவனங்கள் எல்லாம் பெருநகரங்களில் மட்டுமே தங்கள் கிளைகளை தொடங்கி வந்த நிலையில், ஸ்ரீதர் வேம்பு புது முயற்சியாக தென்காசி அருகே ஒரு குக்கிராமத்தில் சோஹோவின் கிளையை தொடங்கி அப்பகுதி இளைஞர்களுக்கு நல்ல சம்பளத்தில் வேலை வழங்கினார். மேலும் பட்டதாரிகளாக இல்லாதவர்களுக்கும் பயிற்சி வழங்கி அவர்களை மென்பொருள் துறைக்கு அழைத்து வந்துள்ளார். இவரது செயல்பாடுகள் இளம் தொழில்முனைவோர்களுக்கு வழிகாட்டியாக அமைந்துள்ளது.
![]()
|