புதுடில்லி: டில்லி திஹார் சிறையில் அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சொகுசு வாழ்க்கை வாழும் வீடியோக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என டில்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
பண மோசடி வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆம் ஆத்மி அமைச்சர் சத்யேந்திர ஜெயின், சிறையில் சொகுசு வாழ்க்கை வாழ்வது குறித்த வீடியோக்கள் ஒவ்வொன்றாக வெளியாகி வருகிறது. முதலில், கைதிகள் மசாஜ் செய்யும் வீடியோ வெளியான நிலையில், பிறகு சாப்பாடு குறித்த வீடியோவும் வெளியானது.
தற்போது, சிறை அறையில், சிறை கண்காணிப்பாளர் மற்றும் விருந்தினர்களை சத்யேந்திர ஜெயின் சந்தித்து பேசும் வீடியோவும் வெளியானது. வீடியோக்கள் வெளியான விவகாரம் தொடர்பாக சிறை கண்காணிப்பாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், இது தொடர்பாக முதல்வர் கெஜ்ரிவால் கூறுகையில், டில்லி மாநகராட்சி தேர்தல் குறித்து தெளிவாக புரிந்து விட்டது. பா.ஜ.,வின் 10 வீடியோக்களா அல்லது கெஜ்ரிவாலின் வாக்குறுதிகளா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். டிச., 4வரை பொறுத்து இருப்போம். இந்த வீடியோக்களுக்கு மக்கள் உரிய பதிலடி கொடுப்பார்கள்.

மதுபான கொள்கை குறித்த விவகாரத்தில் மணிஷ் சிசோடியாவுக்கு நற்சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளது. சுமார் 800 அதிகாரிகள் கடந்த 4 மாதங்களாக பணியாற்றி வந்தனர். அவர்களுக்கு எதை செய்தாவது, மணிஷ் சிசோடியாவை சிறையில் அடைக்க வேண்டும் என்ற பணி கொடுக்கப்பட்டது. ஆனால், குற்றப்பத்திரிகையில், மணிஷ் சிசோடியாவிற்கு எதிராக ஆதாரங்கள் இல்லை. இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.