பிரதமர் மோடி, சமீபத்தில் காசியில் தமிழ் சங்கமம் விழாவை துவக்கி வைத்தார். இங்கு, தமிழை வளர்க்க பிரதமர் அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறார்.

காசி -தமிழ் சங்கமம் விழா தமிழகத்தையும், வட மாநிலங்களையும் இணைக்கும் ஒரு முயற்சி.
இந்த விழாவில் தமிழகத்திலிருந்து 2,500 மாணவர்கள் பங்கேற்கின்றனர். இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒருங்கிணைத்து நடத்துகிறார்.
மாணவர்களை காசிக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணை அமைச்சர் முருகனிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தமிழகத்திலிருந்து மாணவர்கள் காசி அழைத்துச் செல்ல அனைத்து ஏற்பாடுகளையும் செய்தார்.
இந்நிலையில், அடுத்த வருடம்பிப்ரவரியில், புதுடில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கும், சென்னையில் உள்ள பல பல்கலைகளுக்கும் இடையே ஒரு போட்டி நடத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. இதற்கும் முருகன் தான் தமிழக பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.இந்த பொறுப்புகளை முருகனுக்குத் தர முக்கிய காரணம் உள்ளது என்கிறது புதுடில்லி பா.ஜ., வட்டாரம்.

தேசிய பா.ஜ., தலைமை, தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலைக்கு முழு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில், 'முருகனுக்கும், அண்ணாமலைக்கும் இடையே எந்த பிரச்னையும் வரக் கூடாது; அதோடு தமிழக பா.ஜ.,வில் கோஷ்டி பூசலும் வரக் கூடாது' என்பது தேசிய பா.ஜ., தலைமையின் திட்டம் என்கின்றனர். இதனால் முருகனுக்கு பல பொறுப்புகளை தந்து, அவரை பிசியாக வைக்க பா.ஜ., தலைமை நினைக்கிறது.