'மக்கள் சிந்தனை மேடை' அமைப்பு சார்பில், கோவை வரலாறு குறித்த சிறப்பு கருத்தரங்கு, காந்திபுரம் மலையாள சமாஜம் அரங்கில் நடந்தது. நிகழ்ச்சிக்கு அமைப்பின் நிர்வாகி அழகன் கருப்பணன் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக பங்கேற்ற, வரலாற்று ஆய்வாளர் செந்தலை கவுதமன் பேசியதாவது:
கோவை நகர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருந்தவர்கள் ஆர்.கே.சண்முகம் செட்டியார், ரத்தினசாமி முதலியார், சி.டி.நாயுடு ஆகிய மூவரும்தான். இவர்கள் மேற்கொண்ட முயற்சியால்தான், கோவை ஒரு தொழில் நகரமாக உருவானது.
பவானி சாகர் அணை கட்ட பல ஆயிரம் ஏக்கர் நிலம் கொடுத்தவர் ரத்தினசாமி முதலியார். இன்றைக்கு கோவை விரிவான நகரமாக தோற்றம் அளிக்க அவர்தான் காரணம். அவரால்தான் ஆர்.எஸ்.புரம் உருவானது.
ஜி.டி.நாயுடுவால், கோவையில் தொழில்நுட்பம் வளர்ந்தது. சண்முகம் செட்டியாரால், பொருளாதாரம் வளர்ந்தது. நரசிம்மலு நாயுடுவால் சிறுவாணி கிடைத்தது.
பூ.சா.கோ., அறக்கட்டளையால், கோவை கல்வி நகரமானது. இப்படி பலரின் உழைப்பால் கோவை நகரம் சிறப்படைந்துள்ளது.மகாகவி பாரதிக்கும் கோவைக்கும் முக்கிய தொடர்பு உண்டு.
பாரதியாருக்கு பாரதி என்ற பட்டம், கோவையில் இருந்துதான் வழங்கப்பட்டது. கோவையில் வாழ்ந்த சிவஞான யோகி என்பவரல் பாரதி என்ற பட்டம் வழங்கப்பட்டது. பாரதிக்கு முதலில் விழா எடுத்தவர் ஜி.டி.நாயுடு. பாரதியின் நுால்களை நாட்டு உடமையாக்க வேண்டும் என்ற குரல், கோவையில் இருந்துதான் எழுந்தது. மொழி, இலக்கியம், வரலாறு என, பல விஷயங்களில் கோவை வரலாற்று முக்கியத்துவம் பெற்ற நகரமாக விளங்குகிறது.எதிர்காலத்தில் தமிழகத்தில் வேறு எந்த நகரத்துக்கும் இல்லாத சிறப்பு, கோவைக்கு இருக்கும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
கவிஞர் கவியன்பன் பாபு, தெரிந்த கோவை; தெரியாத கதை பற்றி பேசினார்.