உயரம் மூன்றடி இருந்தால் என்ன...பிறரைப் போல் படித்து பெரியாளாக ஆசைப்பட்டார் வெட்டியான் வீரபத்திரன். பள்ளியில் ஆசிரியரும் சக மாணவர்களும் பேசிய கேலிப்பேச்சால் அவரது கனவு, இன்று சுடுகாட்டு மண்ணில் புதைந்து போனது.
அவர் கூறியதாவது: என்னோட தாத்தா மிலிட்டரில வேலை பார்த்து ஓய்வு பெற்றதும், இங்க வேலைக்கு வந்ததா சொல்றாங்க. அவருக்கு பிறகு எங்க அப்பா கிருஷ்ணன் இந்த வேலை பார்த்துட்டு இருந்தாரு. எங்கூடப்பிறந்தவங்க, 5 பேர்.
நான் நாலாவது குழந்தையா பிறந்தேன். இப்போ வரைக்கும் குழந்தை உயரத்தில் தான் இருக்கேன். ஒரு அண்ணன் மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார். மீதி இரு அண்ணன்கள் கல்யாணம் பண்ணிக்கிட்டு தனியா போயிட்டாங்க.அக்காவுக்கு கல்யாணம் ஆயிடுச்சி. தங்கச்சி தான் எங்க வம்சத்திலேயே அதிக படிப்பு படிச்சு இருக்கா(பிளஸ்2 வரை), மற்ற யாருமே படிக்கலை.
எனக்கு படிக்க ரொம்ப ஆசை. பள்ளிக்கு போகும் போது, சக மாணவர்கள் 'கூளையன்' வந்துட்டான், குட்டையன் வந்துட்டான்னு சொல்றதும், வெட்டியான் மகன் பக்கத்துல உட்காராதீங்கடானு ஒதுக்கி வைக்கிறதும், என்னால தாங்க முடியலைங்க. அப்ப இருந்து பள்ளிக்கூடம் போகலைங்க. டீச்சரே வெட்டியான் மகன்னு கூப்பிட்டதை தான் ஏத்துக்க முடியலைங்க.
கொஞ்சம் வயசு அதிகமானதும், எங்க அப்பா சுடுகாட்டுல அவருக்கு ஒத்தாசையா இந்த வேலையை ஆரம்பிச்சேன். வேற வேலைக்கு போனாலும், என்னுடைய உயரத்துக்கு எங்கேயும் யாரும் வேலை கொடுக்கலை. அப்பா காணாமல் போனதுக்கு அப்புறம், வேற வழியே இல்லாம குடும்பத்துக்காக இந்த வேலை செய்ய ஆரம்பிச்சு, 15 வருஷம் ஆகிடுச்சு. மனசும் உடம்பும் நிறைய காயம் பட்டு பட்டு மரத்து போச்சு.
எனக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு பொண்ணு பார்த்தாங்க. ஆனால், இந்த வேலை செய்யும் எங்க குடும்பத்துக்கு நல்லது, கெட்டதுக்கு கூட பத்திரிகை வைக்க மனசு வராதவங்க, எனக்கு எப்படி பொண்ணு கொடுக்க முன் வருவாங்க. கல்யாணம் எல்லாம் கற்பனைதான்.
இன்னைக்கு வரைக்கும் யாருமே என் பெயரை சொல்லி கூப்பிட்டதே இல்லை. சடலத்தை எடுத்து வரும் சொந்தக்காரங்க, குழி போட்ட கூலியை கூட தூக்கிதான் போடுவாங்க. வெட்டியான், குட்டையான்னு கூப்பிடுவாங்க. அப்பல்லாம் ஊனம் எனக்கா இல்லை அவங்களுக்கான்னு மனசுக்குள்ள சிரிச்சுக்குவேன். ஒருத்தரும் என்னை மனுசனா கூட மதிக்கிறது இல்லை.இவ்வாறு, அவர் கூறினார்.
சிரித்துக் கொண்டே அவர் இதை கூறினாலும், நமக்கு என்னவோ மனது பாரமாக இருந்தது. இவர் உயரம் மூன்றடி தான். ஆனால், உயிரிழந்தவர்களுக்கு ஆறடி கொடுப்பது இவர்தான்.