புதுடில்லி:பணப் பரிமாற்ற மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட புதுடில்லி அமைச்சர் சத்யேந்தர் ஜெயினின் சிறை அட்டகாசங்கள் தொடர்கின்றன. ஏற்கனவே சிறைக்குள் அவருக்கு சொகுசு வசதிகள் அளிக்கப்படும் 'வீடியோ' க்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது ஜெயிலரே, சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் வந்து, அளவளாவும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த அளவுக்கு, 'ஆம் ஆத்மி' கட்சி அதிகாரம் சேர்த்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.
புதுடில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இவரது அமைச்சரவையில் சுகாதாரம் மற்றும் உள்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயின், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு, திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். ஆனாலும், இலாகா இல்லாத அமைச்சராக அவர் நீடிக்கிறார்.
மசாஜ்
திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த அரசியல் புரோக்கர் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு வி.வி.ஐ.பி., போல் சலுகை காட்டப்படுவதாகவும், இதற்காக ஜெயிலருக்கு லஞ்சம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
இது குறித்து விசாரிக்க சிறை நிர்வாகம் சார்பில் குழு அமைக்கப்பட்டது. இதன் அடிப்படையில் திஹார் ஜெயிலர் அஜித் குமார், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சிறைக்குள் சத்யேந்தர் ஜெயின் அனுபவிக்கும் சலுகைகள் குறித்த வீடியோக்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
முதலில், சிறையில் சத்யேந்தர் ஜெயினுக்கு ஒருவர் 'மசாஜ்' செய்யும் வீடியோ வெளியானது. இதில் சத்யேந்தர் ஜெயின் படுத்துக்கொண்டே புத்தகம் படிப்பது, அவரது கை, கால்களை ஒருவர் அமுக்கி விடுவது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தன.
'சத்யேந்தர் ஜெயினுக்கு முதுகு தண்டுவடத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், உடற்பயிற்சி நிபுணர் அவருக்கு பயிற்சி அளித்ததை, பா.ஜ.,வினர் தவறாக சமூக வலைதளத்தில் பரப்புகின்றனர்' என, ஆம் ஆத்மி கட்சியினர் தெரிவித்தனர்.
ஆனால், சத்யேந்தர் ஜெயினுக்கு மசாஜ் செய்தவர், பாலியல் பலாத்கார வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதி என தெரியவந்தது.
அடுத்ததாக ஹோட்டலில் இருந்து வரவழைக்கப்பட்ட அறுசுவை உணவை, சத்யேந்தர் ஜெயின் சாப்பிடும் வீடியோ வெளியானது.
இதை சுட்டிக்காட்டிய பா.ஜ., தலைவர்கள், 'சத்யேந்தர் ஜெயினுக்காக சிறையை சொகுசு விடுதியாக மாற்றியுள்ளனர்' என்றனர்.
ஊழல் கட்சி
இந்நிலையில் நேற்று மீண்டும் ஒரு வீடியோ வெளியானது. இதில், சிறையில் சத்யேந்தர் ஜெயின் அடைக்கப்பட்டுள்ள அறைக்குள் மூவர் வந்து, அவருடன் சிறிது நேரம் சுவாரசியமாக பேசுகின்றனர்.
இதைத் தொடர்ந்து ஜெயிலர் அஜித் குமார், அந்த அறைக்கு வருகிறார். அவர் வந்ததும், மற்ற மூவரும் அங்கிருந்து செல்கின்றனர். பின், அஜித் குமாரும், சத்யேந்தர் ஜெயினும் அளவளாவுகின்றனர்.
'ஊழலுக்கு எதிரான கட்சி என கூறப்பட்ட ஆம் ஆத்மி தற்போது ஊழல் கட்சியாகி விட்டது. இவர்களுக்கு மற்றவர்களை குறை கூறுவதற்கு எந்த அருகதையும் இல்லை' என, பா.ஜ., தலைவர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
தீவிர கவனம்
இதற்கிடையே, சிறையில் தனக்கு விருப்பப்பட்ட உணவை அளிக்கக்கோரி சத்யேந்தர் ஜெயின் தாக்கல் செய்த மனுவை, புதுடில்லி நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.
தற்போது குஜராத் சட்டசபை மற்றும் புதுடில்லி மாநகராட்சி தேர்தல்களில், ஆம் ஆத்மி தலைவர்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தங்கள் கட்சியின் மூத்த நிர்வாகியும், புதுடில்லி அமைச்சருமான சத்யேந்தர் ஜெயின், சிறைக்குள் பல சொகுசு வசதிகளை அனுபவிக்கும் வீடியோ அடுத்தடுத்து வெளியாகி, அவரது அட்டகாசத்தை அம்பலப்படுத்தி வருகிறது.
இந்த வீடியோ விவகாரம், தேர்தலில் தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என, ஆம் ஆத்மி தலைவர்கள் கலக்கத்தில் உள்ளனர்.