''கண்ணை பறிகொடுத்தவரை தலைமை கண்டுக்கலையேன்னு புலம்புதாவ வே...'' என்றபடியே, பெஞ்ச் பேச்சை ஆரம்பித்தார் பெரியசாமி அண்ணாச்சி.
''யாருக்கு ஓய் கண் போயிடுத்து...'' என, பதற்றமாகக் கேட்டார் குப்பண்ணா.
''சமீபத்துல, ராமேஸ்வரத்துல இருந்து கடலுக்கு போன தமிழக மீனவர்கள் எட்டு பேர் மீது, இலங்கை கடற்படையினர் கண்மூடித்தனமா தாக்குதல் நடத்தினாங்கல்லா... இதுல, தி.மு.க.,வை சேர்ந்த மீனவர் ஜான்சனின் கண்ணுல அடிபட்டு, பார்வையே பறிபோயிட்டு வே...
''பார்வை இழந்து, வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்ட ஜான்சனுக்கு கட்சி தலைமை, இதுவரை எந்த உதவியும் செய்யலை... 'அவரது குடும்பத்துக்கு நிவாரணம் வழங்கணும்'னு, மீனவரணி நிர்வாகிகள் சார்புல, முதல்வர் ஸ்டாலினுக்கு மனு அனுப்பியிருக்காவ வே...'' என்றார், அண்ணாச்சி.
''ஆப்பரேஷன் பண்ணியும் கூட ஆபீசுக்கு வந்திருக்காருங்க...'' என, அடுத்த மேட்டருக்கு மாறினார் அந்தோணிசாமி.
''யாருப்பா அந்த சின்சியர் சிகாமணி...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''தமிழகத்துல மழை காலத்துல மரக்கிளைகள் முறிஞ்சு விழுறதும், காத்துல மின் சாதனங்கள் சேதமாகிறதும் வழக்கம்... இதனால, மின் வாரியம் சார்புல மழை 'சீசன்'ல சிறப்பு பராமரிப்பு பணிகளை செய்வாங்க...
''சேதமடைந்த மின் கம்பங்களை மாத்துறது, மின் வினியோக பெட்டி களை சீரமைக்கிறது, மின் கம்பங்களுக்கு பக்கத்துல இருக்கிற மரக்கிளைகளை வெட்டு றதுன்னு, சமீபத்துல தமிழகம் முழுக்க இந்தப் பணிகள் நடந்துச்சுங்க...
''இந்தப் பணிகளின் முன்னேற்றம் குறித்து, மின் வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, தினமும் மாவட்ட வாரியாக அறிக்கை கேட்டிருக்கார்... இந்த மாத துவக்கத்துல, லக்கானிக்கு ஒரு ஆப்பரேஷன் நடந்திருக்குது...
''அந்த நேரத்துல, தமிழகம் முழுக்க மழையும் பெய்ஞ்சிட்டு இருந்ததால, ஆப்பரேஷன் முடிஞ்ச மறுநாளே ஆபீசுக்கு வந்து, சிறப்பு பராமரிப்பு பணிகளை முடுக்கி விட ஆரம்பிச்சிட்டாருங்க... தனக்கு ஆப்பரேஷன் நடந்த விஷயத்தைக் கூட, சக அதிகாரிகள் யாரிடமும் அவர் பகிர்ந்துக்கலை... இப்பத்தான் இந்த தகவல் தெரியவந்திருக்குதுங்க...'' என்றார், அந்தோணிசாமி.
''எடுபிடி வேலைக்கு வந்தவர், எல்லாரையும் அலற விடறார் ஓய்...'' என்றார், குப்பண்ணா.
''அடடா... எந்த துறையில பா...'' எனக் கேட்டார், அன்வர்பாய்.
''கோட்டையில இருக்கற போக்குவரத்து துறை அமைச்சர் ஆபீஸ்ல தான் இந்த கூத்து... ஆபீசுக்கு பல்வேறு சிபாரிசுகளோட வர்ற கூட்டணி கட்சியினரை, 'டீல்' செய்றதுக்காக, மேலிட வீட்டு சிபாரிசுல, கட்சிக்காரர் ஒருத்தரை நியமிச்சிருந்தா ஓய்...
''ஆரம்பத்துல பசுவா இருந்தவர், இப்ப புலியா மாறிண்டார்... கூட்டணிக் கட்சி எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள்னு யார் வந்தாலும், நெத்தியில அடிச்சா மாதிரி, அவா பெயரைச் சொல்லியே கூப்பிடறார் ஓய்...
''அவா ஏதாவது விண்ணப்பம், சிபாரிசு கடிதம் குடுத்தாலும், 'அமைச்சர் ஊர்ல இல்லை... வந்ததும் குடுத்துடறேன்'னு சொல்லிண்டு, துாக்கி ஓரமா போட்டுடறார்... பி.ஏ.,க்கள் கேட்டா, 'எல்லாம் ஓசி வேலை... பைசா பேறாது... பொறுமையா செஞ்சுக்கலாம்'னு அசால்டா அடிச்சு விடறார் ஓய்... இவரை பார்த்து, அமைச்சர்களின் பி.ஏ.,க்களே பயந்து நடுங்கறான்னா பாருங்கோ...'' என முடித்தார், குப்பண்ணா.
''நேத்து, 'டிவி'யில உள்ளத்தை அள்ளித் தா படம் பார்த்தேன்... காமெடியில கார்த்திக் பின்னி எடுத்துட்டாருல்லா...'' என அண்ணாச்சி கூற, அரட்டை சினிமா பக்கம் திரும்பியது.
சி.எம்.டி.ஏ., லஞ்ச வசூலுக்கு 'டோக்கன் சிஸ்டம்!'
''அரசியல்வாதியா
இருக்கிறவர் குத்துச்சண்டை, இலக்கியம்னு ஆர்வம் காட்டுறது ஆச்சரியமாக
இருக்கு பா...'' என்றபடியே வந்தார், அன்வர்பாய்.
''யார் ஓய் அது...'' எனக் கேட்டார், குப்பண்ணா.
''ம.தி.மு.க.,
துணை பொதுச் செயலர் மல்லை சத்யா இருக்காரே... அந்தக் கட்சியில பெருசா
எந்தப் பணிகளும் இல்லாததால, மல்லை தமிழ் சங்கத்தின் தலைவரா இருந்து, பல
கூட்டங்களை நடத்துறாரு பா...
''வி.ஜி.பி., உலக தமிழ் சங்கத்தின்
தலைவர் வி.ஜி.சந்தோஷத்துடன் சேர்ந்து, வெளிநாடு வாழ் தமிழர்கள் நடத்துற
இலக்கிய கூட்டங்கள், பட்டமளிப்பு விழாக்கள்ல கலந்துக்கிறாரு...
''இதுபோக,
சர்வதேச அளவுல குத்துச்சண்டை போட்டி நடத்தி, தமிழர்களின் பாரம்பரிய
விளையாட்டின் பெருமைகளை உலக அளவுல கொண்டு போக அவருக்கு ஆசையாம்... அதுக்கான
முயற்சியில இப்ப இறங்கி இருக்காரு பா...'' என்றார், அன்வர்பாய்.
''பதவி உயர்வு விவகாரத்துல, ரெண்டு சங்கங்கள் முட்டிட்டு நிற்குதுங்க...'' என்றபடியே சூடான டீயை உறிஞ்சினார், அந்தோணிசாமி.
''விபரமா சொல்லும் வே...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.
''வேளாண்
பொறியியல் துறையில, பி.இ., வேளாண் பொறியியல் படிச்சவங்க தனியாகவும், மற்ற
பொறியியல் பாடங்கள் படிச்சவங்க தனியாகவும் சங்கம் அமைச்சு செயல்படுறாங்க...
''வேளாண்
பொறியியல் படிச்சவங்களுக்கு, நேரடியா உதவி பொறியாளர் பதவி கிடைக்குது...
அடுத்தடுத்து, 'ஜெட்' வேகத்துல பதவி உயர்வும் கிடைச்சு போயிடுறாங்க...
''ஆனா,
மத்தவங்களுக்கு, 20 வருஷமா பதவி உயர்வு தராம இழுத்தடிக்கிறாங்க... 'நாங்க
பதவி உயர்வு கிடைக்காமலேயே ரிட்டயர் ஆகணுமா'ன்னு இவங்க எல்லாம்
புலம்புறாங்க... 'இத்தனைக்கும் துறையில நிறைய பணியிடங்கள் காலியா
இருந்தும், எங்களை அதுல நியமிக்க, வேளாண் பொறியியல் படித்தவர்கள் சங்கம்
முட்டுக்கட்டையா இருக்குது'ன்னு வருத்தப்படுறாங்க...
''சங்கங்களுக்கு இடையிலான சண்டையால, அரசு திட்டங்கள் மக்களுக்கு முழுசா போய் சேர மாட்டேங்குதுங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.
''லஞ்சம் வசூல் பண்றதையே, 'சிஸ்டமேட்டிக்'கா செய்யறா ஓய்...'' என, கடைசி தகவலுக்கு வந்த குப்பண்ணாவே தொடர்ந்தார்...
''புது
கட்டடங்கள் கட்டறதுக்காக, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமமான
சி.எம்.டி.ஏ.,வுக்கு வர்ற விண்ணப்பங்கள் மீது பரிசீலனை முடிஞ்ச அப்புறம்,
சம்பந்தப்பட்ட பில்டருக்கு ஒரு மர்ம போன் அழைப்பு வரது ஓய்...
''மறுமுனையில
பேசறவர், அமைச்சர் ஆபீஸ்ல இருந்து பேசறதா சொல்றார்... விண்ணப்பம்
சம்பந்தமா விசாரிக்கறவர், 'டோக்கன் நம்பர்' ஒண்ணை தரார் ஓய்...
''அப்பறமா
இன்னொருத்தர் போன் போட்டு அந்த, 'டோக்கன் நம்பரை' சொல்லி, சதுர அடிக்கு,
24 ரூபாய் குடுத்துடுங்கோன்னு தொகையை, 'பைனல்' பண்றாராம்... பணத்தை எங்க,
எப்ப, எப்படி தரணும்னு இன்னொருத்தர், 'கால்' செஞ்சு சொல்றார் ஓய்...
''அவா
சொன்ன இடத்துக்கு பணத்தோட போனதும், 'எஸ்கார்ட்' உடன் வர்ற நபர், பணத்தை
வாங்கிண்டு சர்னு புறப்பட்டு போயிடறார்... அடுத்த சில நாட்கள்ல, கட்டட
அனுமதி வீடு தேடி வந்துடறது... சி.எம்.டி.ஏ., வரலாற்றுலயே முதல் முறையா,
டோக்கன் போட்டு ராணுவ ஒழுங்குடன் லஞ்சம் வசூலிக்கறது இப்படித்தான் நடக்கறது
ஓய்...'' என முடித்தார், குப்பண்ணா.
அரட்டை முடிய பெஞ்ச் கலைந்தது.