திருவொற்றியூரில், நாம் தமிழர் என்ற
கட்சியின் மருத்துவ பாசறை நடத்திய இலவச மருத்துவ முகாமை, அக்கட்சியின்
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் துவக்கி வைத்தார்.
அப்போது
பேசுகையில், 'சென்னையில், திருவொற்றியூர் மட்டுமல்ல; அனைத்து இடங்களிலும்,
சாலைகள் பள்ளம், மேடுமாக, சவக்குழிகளாகவே உள்ளன. மழை நீர் வடிகால் பணியில்,
தற்போது தான் தீவிரம் காட்டி வருகின்றனர். இதை முன்னரே செய்து
முடித்திருக்க வேண்டும்.
'சென்னை மேயர் பிரியா பேச தடுமாறுகிறார்.
பல ஆண்டுகளாக அரசியலில் இருப்பவர்களே தடுமாறுவதுண்டு. எளிய பின்னணியில்
இருந்து வந்தவரின் பேச்சு தடுமாற்றத்தை பெரிதுபடுத்த வேண்டியதில்லை. மேயர்
சின்னப்பிள்ளை என்பதால், பொறுத்துக் கொள்ள வேண்டும்' என்றார்.
மூத்த
நிருபர் ஒருவர், 'மேயருக்கு வக்காலத்து வாங்குறது இருக்கட்டும்... நீங்க
தான் பேச்சில் அனல் தெறிக்க விடுவீங்களே... அவங்களுக்கான பேச்சு
பயிற்சிக்கு, நீங்க ஸ்பெஷல் கிளாஸ் எடுத்தால் தான் என்ன...?' என, 'கமென்ட்'
அடிக்க, மற்றவர்கள் கமுக்கமாக சிரித்தனர்.
'கடவுளுக்கு தான் வெளிச்சம்!'
சேலம் மாவட்டம், ஆத்துாரை அடுத்த கருமந்துறையில், கைக்கான்வளவு நீரோடை திட்டத்தில் தண்ணீர் திறந்து விடும் விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு பங்கேற்றார். தண்ணீர் திறந்து விட்ட பின், அதன் வழிப்பாதையை பார்வையிட்டார்.
அப்போது, சேலம் கலெக்டர் கார்மேகம் மற்றும் பொதுப்பணித் துறை அலுவலர்களுடன் பேசியபடி நடந்து சென்ற நேரு, 'கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் தானே, இந்த திட்டத்தை கொண்டு வந்தனர். விவசாயிகளுக்கு பயனுள்ள, இதுபோன்ற திட்டத்தை கொண்டு வந்தால் தான் விவசாயம் செழிக்கும்; விவசாயிகளும் பயனடைவர்' என்று, பாராட்டி பேசினார்.
அங்கிருந்த ஒரு அதிகாரி, 'பரவாயில்லையே... அ.தி.மு.க., கொண்டு வந்த திட்டத்தை, தி.மு.க., அமைச்சர் மனம் திறந்து பாராட்டுகிறாரே...' என முணுமுணுக்க, மற்றொரு அதிகாரி, 'அவர் உண்மையில் பாராட்டுகிறாரா, இல்ல நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை வெறுப்பேத்த, இப்படி பேசுறாரான்னு கடவுளுக்கு தான் வெளிச்சம்...' என, முணுமுணுத்தபடி நடையை கட்டினார்.
'டவுசர் கிழிஞ்சு நிற்கிறாங்க!'
மதுரை மாவட்ட அ.தி.மு.க. சார்பில், திருப்பரங்குன்றத்தில், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம், மாவட்ட செயலரும், எம்.எல்.ஏ.,வுமான ராஜன் செல்லப்பா தலைமையில் நடந்தது.
அப்போது பேசுகையில், 'தி.மு.க.,வினர் நம்மை பார்த்து, அ.தி.மு.க., இரண்டு துண்டாக உடைந்து விட்டதாக கூறுகின்றனர். ஆனால், இப்போது அவர்கள் நிலையை பார்த்தால் பரிதாபமாக உள்ளது.
'அக்கட்சியில் தான், உதயநிதி, சபரீசன், துரைமுருகன், தியாகராஜன், பெரியசாமி என, ஏழு துண்டுகளாக சிதறி, அவர்களுக்குள் குடுமிப்பிடி சண்டை போடுகின்றனர். அவர்கள் நம் கட்சியை பற்றி குறை கூறாமல், அவர்களின் உட்கட்சி பூசலை ஓட்டை இல்லாமல் பூசினால் போதும்' என்றார்.
மூத்த நிருபர் ஒருவர், 'அவங்க ஆளுங்கட்சி... ஆயிரத்தெட்டு ஓட்டைகள் இருந்தாலும் அடைச்சிடுவாங்க... இவங்க தான், எதிர்க்கட்சியா இருக்கிறதையே மறந்து, தங்களுக்குள்ள அடிச்சுக்கிட்டு டவுசர் கிழிஞ்சு நிற்கிறாங்க... முதல்ல இவங்க ஒற்றுமையானா தான் கட்சி கரைசேரும்...' என, முணுமுணுத்தவாறு நடையை கட்டினார்.