புதுடில்லி,-'மக்களின் வரிப்பணத்தில் புதுடில்லி மசூதிகளில் உள்ள இமாம்களுக்கு சம்பளம் கொடுக்கும்படி பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, அரசமைப்பு சட்டத்தை மீறும் செயல். தேவையற்ற அரசியல் மற்றும் சமூக பிரச்னைகளை ஏற்படுத்துவதற்கான, தவறான முன் உதாரணமாக இந்த உத்தரவு உள்ளது' என, மத்திய தகவல் ஆணையம் தெரிவித்துள்ளது.
![]()
|
புதுடில்லியில், முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது.
இங்கு சுபாஷ் அகர்வால் என்ற சமூக ஆர்வலர், மத்திய தகவல் ஆணையத்தில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்திருந்த மனுவில் கூறப்பட்டிருந்ததாவது:
புதுடில்லியில் உள்ள எத்தனை மசூதிகளில் இமாம்களுக்கு சம்பளம் வழங்கப்படுகிறது, இதற்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு, இந்த தொகை எங்கிருந்து வருகிறது என்பது உள்ளிட்ட விபரங்களை தெரிவிக்க வேண்டும்.
அரசமைப்பு சட்டம்
மேலும், அரசு சார்பில் இமாம்களுக்கு சம்பளம் வழங்கப்படுவது போல், கோவில்களில் உள்ள பூசாரிகளுக்கும் வழங்கப்படுகிறதா என்ற விபரத்தையும் தெரிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனு, மத்திய தகவல் ஆணையர் உதய் மாஹுர்கர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தகவல் ஆணையர் பிறப்பித்த உத்தரவு:
இமாம்களுக்கு சம்பளம் வழங்க அனுமதி அளித்து, 1993ல் உச்ச நீதிமன்றம் ஒரு உத்தரவு பிறப்பித்துள்ளது.
எந்த ஒரு குறிப்பிட்ட மதத்துக்கும் ஆதரவாக மக்கள் வரிப்பணத்தை செலவிடக் கூடாது என அரசமைப்பு சட்டம் கூறுகிறது.
எனவே, உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசமைப்பு சட்டத்துக்கு விரோதமானது. இது, தேவையற்ற அரசியல் மற்றும் சமூக பிரச்னை ஏற்படுவதற்கு தவறான முன் உதாரணமாக அமைந்து விடும்.
இந்த விவகாரத்தில் அரசமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ள விஷயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இது குறித்து தகவல் கேட்டதற்காக, மனுதாரரை அலைக்கழித்ததற்கும், திருப்தியான பதிலை அளிக்காததற்கும் புதுடில்லி வக்போர்டு, அவருக்கு 25 ஆயிரம் ரூபாய் இழப்பீடு அளிக்க வேண்டும்.
முஸ்லிம் சமூகத்தினருக்கு சிறப்பு சலுகை அளிப்பதற்கு முன், நாட்டின் வரலாற்றை சற்று புரட்டிப் பார்க்க வேண்டும்.
நாடு சுதந்திரம் அடைந்தபோது, இங்கு வசித்த முஸ்லிம்களில் ஒரு தரப்பினர், மத அடிப்படையில் தங்களுக்கு தனி நாடு கோரினர். அந்த கோரிக்கை அடிப்படையில் தான் பாகிஸ்தான் உருவானது.
ஆனால் இந்தியா மதச்சார்பற்ற நாடு. அனைத்து மதங்களையும் சமமாக மதிக்க வேண்டும் என அரசமைப்பு சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை உறுதி செய்ய வேண்டியது அவசியம்.
உரிய பதில்
எனவே, மசூதிகளில் உள்ள இமாம்களுக்கு மட்டும் சம்பளம் வழங்குவது என்பது, ஹிந்து சமூகத்தினருக்கும், முஸ்லிம் அல்லாத மற்ற சிறுபான்மை சமூகத்தினருக்கும் இழைக்கும் துரோகம்.
மேலும், இந்தியாவில் உள்ள முஸ்லிம்களில் குறிப்பிட்ட தரப்பினரிடையே, உலகளாவிய இஸ்லாம் என்ற மனநிலை உள்ளது. இது, இந்த மனநிலையை மேலும் ஊக்கப்படுத்துவதற்கும் வழி வகுத்து விடும்.
புதுடில்லி வக்போர்டு, மாநில அரசிடமிருந்து, ஆண்டுக்கு 62 கோடி ரூபாய் மானியமாக பெறுகிறது. ஆனால், அதன் மாத வருமானம், 30 லட்சம் ரூபாய் தான்.
புதுடில்லியில் உள்ள இமாம்களுக்கு கவுரவ ஊதியமாக, மாதம் 18 ஆயிரம் ரூபாய், டில்லி அரசால் மக்கள் வரிப்பணத்தில் இருந்து வழங்கப்படுகிறது.
![]()
|
ஒரு ஹிந்து கோவிலின் பூசாரி, அந்த கோவிலை நிர்வகிக்கும் அறக்கட்டளையிடமிருந்து மாதம், 2,000 ரூபாய் தான் பெறுகிறார் என, மனுதாரர் சுட்டிக்காட்டிய விஷயத்துக்கு முற்றிலும் முரணமாக இமாம்களுக்கான சம்பளம் உள்ளது.
சிறுபான்மை மக்களை பாதுகாப்பதற்காக இதுபோன்ற சலுகைகள் வழங்கப்படுவதாக ஒரு சிலர் கூறலாம். அதேபோல், பெரும்பான்மை மக்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதையும் அவர்கள் உணர வேண்டும்.
எனவே, இந்த விவகாரம் தொடர்பாக புதுடில்லி வக்போர்டும், புதுடில்லி முதல்வரும் இந்த மனுவுக்கு உரிய பதில் அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் உத்தரவிட்டார்.
Advertisement