புதுடில்லி,-''நாட்டுக்கான தங்களுடைய கடமையை நிறைவேற்றுவதே ஒருவரின் முதன்மையான அடிப்படை உரிமையாகும்,'' என, அரசியல் சாசன தின விழாவில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.
அரசியல் சாசன தினத்தையொட்டி உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு நிகழ்ச்சிக்கு நேற்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள், அட்டர்னி ஜெனரல் ஆர். வெங்கட்ரமணி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
இந்த நிகழ்ச்சியில், பல்வேறு 'மொபைல் போன் ஆப்' உள்ளிட்ட புதிய முயற்சிகளை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது:
மிக வேகமான பொருளாதார வளர்ச்சியை கண்டு வரும் நம் நாட்டை, மற்ற நாடுகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் நோக்கி உள்ளன.
ஜி - ௨௦ அமைப்பின் தலைமை பொறுப்பை விரைவில் நாம் ஏற்க உள்ளோம். உலகத்துக்கு நம் நாட்டின் பங்களிப்பை விளக்குவதற்கு இது மிகப் பெரும் வாய்ப்பாகும். சர்வதேச அரங்கில் நம் நாட்டுக்கு உள்ள பெருமையை நிலைநிறுத்த வேண்டியது நம் அனைவரின் கூட்டுப் பொறுப்பாகும்.
நம் நாடு ஜனநாயகத்தின் தாயாக பார்க்கப்படுகிறது. நம் ஜனநாயக நெறிகள், நாட்டின் பாரம்பரிய முறைகளுடன் கூடியதாக அமைந்துள்ளன. இங்கு, அரசியல் சாசனத்துக்கு அளிக்கப்படும் மரியாதை, நம் நாட்டின் பெருமையை மேலும் வலுவாக்குகிறது.
'நாட்டு மக்களாகிய நாம்' என்றே நம்முடைய அரசியல் சாசனத்தின் முகவுரை துவங்குகிறது.
அரசியல் சாசனத்தின் உண்மையான நோக்கத்தை நிறைவேற்றுதல், நாட்டு மக்களின் நலனுக்கான திட்டங்கள், ஏழை, எளிய மக்கள், பெண்களுக்கு அதிக அதிகாரமளிக்கும் முயற்சிகளில் நாம் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்.
'ஒருவருடைய அடிப்படை உரிமை என்பது, தன் கடமையை நிறைவேற்றுவதே' என மஹாத்மா காந்தி குறிப்பிட்டுள்ளார்.
தனிமனிதனாக இருந்தாலும், அமைப்பாக இருந்தாலும், அனைவருக்கும் பொறுப்பு உள்ளது. அந்தப் பொறுப்பை, கடமையை நிறைவேற்றுவதே நம் அனைவரின் முன்னுரிமையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பேசியதாவது:பல்வேறு வேறுபாடுகளை கொண்ட நம் நாட்டில், அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது நீதிமன்றங்களின் பொறுப்பாகும். இதற்காக, சமீபத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.புதுடில்லியில் உச்ச நீதிமன்றம் அமைந்திருந்தாலும், அது நாடு முழுமைக்குமானது. அதனால் தான், 'ஆன்லைன்' வாயிலாக நாட்டின் எந்தப் பகுதியில் இருந்தும் வாதிடும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.வழக்குகள் பதிவு செய்வதில் இருந்து, அனைத்திலும் புதிய தொழில்நுட்பங்களை புகுத்த விரும்புகிறேன்.மாவட்ட நீதிமன்றங்களுக்கென தனியாக, 'மொபைல் போன் ஆப்' உள்ளது. இதில் இருந்து வழக்குகள் தொடர்பான அனைத்து தகவல்களையும் பெற முடியும்.மிகவும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்த மக்களும், நீதித் துறையில் உரிய பிரதிநிதித்துவத்தை பெற வேண்டும். நம்முடைய நீதிமன்ற நடைமுறைகளை பல நாடுகள் பின்பற்றுகின்றன.இவ்வாறு அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சியில், பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு பேசியதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நீதித் துறையுடன் இணைந்து செயல்படுகிறது. நீதித் துறை மற்றும் அரசுக்கு இடையே நல்ல இணக்கமான உறவு உள்ளது. இதன் வாயிலாக அனைத்து பிரச்னைகளுக்கும் சுமுக தீர்வு காணப்பட்டு வருகிறது.மிகப் பெரிய நாடான நம் நாட்டில் அனைத்து மக்களுக்கும் நீதி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கு உள்ளூர் மொழிகளில் நீதிமன்றங்கள் செயல்படுவது முக்கியமாகும்.இவ்வாறு அவர் பேசினார்.