சென்னை:திருவேற்காடு, பெரியார் நகர், நான்காவது குறுக்கு தெருவில் உள்ள வீட்டில், கஞ்சா விற்கப்படுவதாக, பூந்தமல்லி மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
போலீசார் அங்கு சென்று சோதனை செய்ததில், கோணிப்பையில் 11 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில், ஷெனாய் நகரைச் சேர்ந்த பாஸ்கர், 38, நெய்வேலியைச் சேர்ந்த பிரதீப் மோகன், 26, மாங்காட்டைச் சேர்ந்த ஜேம்ஸ் தாஸ், 23, மற்றும் வீட்டின் உரிமையாளர் சிவசங்கரி, 38, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரிந்தது.
கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார், நான்கு பேரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில், செங்குன்றம்- கோணிமேடு சந்திப்பில் வாகன சோதனையில் ஈடுபட்ட மதுவிலக்கு போலீசார், 'ஹோண்டா சிடி - 100' பைக்கில் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 10.2 கிலோ கஞ்சா இருந்தது.
விசாரணையில் அவர், வெள்ளானுார் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த ஜெகநாதன், 25, என்பது தெரிய வந்தது. அவரை கைது செய்த மதுவிலக்கு போலீசார், பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மற்றொரு சம்பவத்தில், ஓ.எம்.ஆர்., செம்மஞ்சேரி பகுதியில் இளைஞர்களை குறிவைத்து, ஒரு கும்பல் போதை மாத்திரை விற்பனை செய்ததை அறிந்த செம்மஞ்சேரி போலீசார், பெரும்பாக்கத்தைச் சேர்ந்த தேவா, 22, இனியன், 24, பிரவின், 19, ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து, 2 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 350 போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.