பல்லடம்,--பல்லடம் அருகே போலீசார் இருவரை கடித்து வைத்த கைதி ஒருவர், மீசையை முறுக்கியபடி 'கெத்து' காட்டியது வியப்பை ஏற்படுத்தியது.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி, அறிவொளி நகரைச் சேர்ந்தவர் பாபா பக்ருதீன், 37. இவரது மனைவி, மாணிக்காபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார்.
நேற்று அந்நிறுவனத்துக்கு சென்ற பாபா பக்ருதீன், மனைவியை இங்கு வேலைக்கு சேர்க்கக்கூடாது என, நிர்வாகத்துடன்தகராறு செய்துள்ளார்.
நிறுவனத்தினர் அளித்த புகார் அடிப்படையில், போலீசார் அங்கு சென்றனர். ஊராட்சி அலுவலகத்தில் இருந்த பாபா பக்ருதீன், போலீசாரை கண்டதும், ஊராட்சி அலுவலகத்துக்குள் சென்று கதவை தாழிட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, அரை நிர்வாண கோலத்தில் சத்தம் போட்டுக் கொண்டே, 'கைது வாரன்ட் உள்ளதா? ஆர்.டி.ஓ.,வை வரச்சொல்லுங்கள். அவரிடம் தான் சரணடைவேன்' எனக்கூறியுள்ளார்.
தொடர்ந்து, அவரை கைது செய்து வெளியே அழைத்து வந்த போலீசார் இருவரின் கைகளை கடித்து வைத்தார். நீண்ட போராட்டத்துக்கு பின் அவரை போலீசார்ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.
விசாரணைக்கும், மருத்துவ சிகிச்சைக்கு அழைத்து செல்லும்போதும், போலீசார் முன்னிலையில் தொடர்ந்து மீசையை முறுக்கியபடியே சென்றது வியப்பை ஏற்படுத்தியது.