அர்ச்சகர்களில் பயிற்சி காலத்தை குறைத்ததற்கு, தொன்மை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை ஆதீனங்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர்.
![]()
|
தருமபுரம் ஆதீனம் 27வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்ய சுவாமிகள்: ஒவ்வொன்றுக்கும் ஒரு தகுதி இருக்கிறது. அந்த தகுதியின் படி வந்தால் தான், அது செம்மையாக இருக்கும்.
ஒரு மரம் முளைப்பதற்கு வேத வித்து என்பர். அந்த விதை போட்டால் முளைப்பதற்கு ஒரு வாரம் ஆகும். அது வளர்ந்து விருட்சமாகும். இன்றே விதை போட்டு உடன் மரமாக வேண்டும் என்றால் முடியாது.
ஐந்து ஆண்டுகள்
முதல் முதலாக தருமை ஆதீனத்தில், 24வது குரு மஹா சன்னிதானம் ஆட்சி காலத்தில் நாடு வளம் பெற வேண்டுமென்றால், சிவாலய பூஜைகள் விடாமல் இருக்க வேண்டும்; தடையின்றி நடைபெற வேண்டும். அதற்கு தகுதியானவர்கள் சிவாச்சாரியார்கள்.
அது முதல் தற்போது வரை ஐந்தாண்டுகள் பயிற்சி பெற்றும், அதன் பிறகு இரண்டு ஆண்டுகள் யாகசாலை பூஜை, கிரியா விதிகள் செய்வதற்கும் சிலர் பயிற்சி பெறுகின்றனர். ஐந்து ஆண்டுகள் முடித்தால் தான் தகுதியானவர்களாக இருப்பர்.
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு குறிப்பிட்ட ஆண்டுகள் பயிற்சி பெற வேண்டும் என வைத்திருக்கின்றனர். அதை ஒரு மாதம் என்று மாற்ற முடியுமா?
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
திருவாவடுதுறை ஆதீனம், 24வது குருமஹா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ அம்பலவான தேசிக பரமாச்சாரிய சுவாமிகள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், மாணிக்கவாசகர், சுந்தரமூர்த்தி உள்ளிட்ட நால்வரால் பாடம் பெற்ற கோவில்கள், 274 உள்ளது.
இப்படி பாரம்பரிய பெருமைமிக்க அனைத்து கோவில்களிலும், வேத ஆகம முறைப்படி தான் பூஜை நடத்தப்படுகிறது. 12 திருமுறைகளில் உள்ள பாடல்களை படிப்பதற்கு குறைந்தது 5 ஆண்டுகள் ஆவது அவசியம்.
குட முழுக்கு
தேவாரம், திருவாசகம், திருவிசைப்பா, திருப்பல்லாண்டு, திருப்புகழ் என படிப்பதற்குரிய காலம் அவசியம் வழங்கப்பட வேண்டும்.
டாக்டர் ஆவதற்கு ஐந்தாண்டுகள் முழுமையாக படிக்க வேண்டி உள்ளது. தமிழகத்தில் பாரம்பரிய கோவில்களில் ஆகம முறைப்படி தான் யாகசாலை அமைத்து குடமுழுக்கு நடக்கிறது.
எனவே, தமிழக அரசு ஓதுவார்கள், பூஜை செய்யக் கூடியவர்களுக்கு ஓராண்டு பயிற்சி காலம் போதும் என்ற முடிவு மிகவும் தவறானது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம், திருப்பனந்தாள் காசி திருமடம் அதிபர் கயிலை மாமுனிவர் ஸ்ரீலஸ்ரீ முத்துக்குமாரசுவாமி தம்பிரான் சுவாமிகள்: திருக்கோவிலில் அர்ச்சகர் பணிக்கு ஐந்து ஆண்டு பயிற்சி என்பதை தமிழக அரசின் ஹிந்து சமய அறநிலைய துறை ஓராண்டு போதும் என அறிவித்துள்ளது.
மிக இன்றியமையா அடிப்படைக் கல்வி என்பதை, 10, +2 என வடிவமைத்து. அதன் பின் உயர் கல்வியை 3, 4 ஆண்டு என எல்லா மாநிலங்களும் நடைமுறைப்படுத்தி வருகின்றன.
பொருந்தாது
அப்படி இருக்கையில், 'முப்போதும் திருமேனி தீண்டுவார் - அகத்தடிமை செய்யும்' -என, ஞானாசிரியர்கள் மறைமுகமாக வலியுறுத்திய மீயுயர் தொண்டை- சேவையை- செய்ய குறுகிய ஒரு ஆண்டு பயிற்சி என்பது சிறிதும் பொருந்தாது.
மிக நீண்ட பட்டியல் கொண்ட பூஜைக்கிரியைகள், மந்திரங்கள், ஜபங்கள், கிரியை அமைப்புகள், தொடர் நிகழ்வுகள் போன்றவற்றை ஐயந்திரிபுரக்கற்று முழுமை பெற ஐந்து ஆண்டு பயிற்சி என்பதே பொருந்தியது.
எனவே, ஓராண்டு பயிற்சி என மாற்றப்பெற்ற நிலைப்பாட்டில் இருந்து முன் வலியுறுத்திய ஐந்து ஆண்டு பயிற்சி என்று அறிவிப்பதே சாலச்சிறந்தது. நடைமுறைச் சாத்தியமானது. முழுப் பலனும், பயனும் நல்குவதாக அமையும்
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சூரியனார்கோவில் வாமதேவ சந்தானம், ஸ்ரீ சிவாக்கிர யோகிகள் திருமடம் ஆதீனம், 28வது குருமஹா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மகாலிங்க தேசிக பரமாசாரிய சுவாமிகள்: சேர, சோழ, பாண்டிய, பல்லவ, விஜய நகர மன்னர்களால் கட்டப்பட்ட திருக்கோவில்களில் இன்றளவும் ஆகம விதிகளுக்கு உட்பட்டு ஏழு ஆண்டுகள் பயிற்சி, சிவ ஆகம வேத பாடசாலையின் மூலமாக ஏழு வயது முதல், 15 வயதிற்குள் தொடர்ந்து அளிக்கப்படுகிறது.
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாடசாலைகள் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது. அதில் அரசு தலையிடுவதில்லை. அதுபோன்று திருமடங்களின் மூலமாகவும் பல நுாற்றாண்டுகளாக பாடசாலைகள் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.
இயலாத காரியம்
தமிழ் வழி அர்ச்சகர் பயிற்சியில் பன்னிரு திருமுறைகள், நாலாயிர திவ்ய பிரபந்தம், சைவ சித்தாந்த கருத்துகள், புராணங்கள் போன்றவற்றை அறிந்து கொள்வதற்கும், அதோடு மட்டுமல்லாது கும்பாபிஷேகம் நடத்துவதற்குரிய தேவையான அனைத்து பயிற்சிகளையும் ஓர் ஆண்டில் பாராயணம் செய்வது என்பது இயலாத காரியம்.
ஒரு கோவில் அர்ச்சகர் அந்த திருக்கோவிலுடைய வரலாறு, அது சார்ந்த மரபு, பண்பாடு, கலைகள் இவற்றை பக்தர்களுக்கு எடுத்துரைக்க வேண்டிய நிலைப்பாடு இருக்கிறது.
அதனால் அரசு ஓராண்டு பயிற்சி போதும் என்பதை மறு பரிசீலனை செய்து, தமிழ் வழி அர்ச்சனைகளுக்கு முன்பிருந்தது போல் ஐந்து ஆண்டுகள் என கூடுதல் காலம் கொடுத்து அவர்களுக்கு நல்ல வாய்ப்புகளை வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தமிழ்நாடு மாநில அர்ச்சகர்கள் சமூக நலச்சங்கத்தின் மாநில தலைவர் அருணாச்சலம்: கோவில்களில் சைவம், வைணவ கோவில்கள் உள்ளன. சைவ கோவில்களில், 28 சைவ ஆகமங்களின்படி வழிபாடு நடந்து வருகிறது.
கோவில் அமைக்க இடம் தேர்வு செய்வது முதல், கருவறை மண்டபம், ராஜகோபுரம் என அனைத்தும் ஆகம விதிகளின்படி அமைக்கப்படுகிறது.
இங்கு, மன்னர்கள் காலம் தொட்டு ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, குருக்கள், சிவாச்சாரியார்கள் ஆகம விதிகளின்படி பூஜை செய்து வருகின்றனர்.
![]()
|
கட்டுப்பாடு இல்லை
வைணவ கோவில்களில் பட்டாச்சாரியார்கள் பூஜை நடத்துகின்றனர். காலம் காலமாக நடந்து வரும் இந்த வழிபாட்டு முறைகளில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என, 1972ம் ஆண்டு, சேஷம்மாள் வழக்கு தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் தெளிவாக தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது, வழிபாட்டு முறைகளில் மாற்றம் செய்ய அறநிலையத்துறை முனைந்திருப்பது கோவில் மரபுகளை சிதைத்து விடும். ஆகம விதிப்படி கட்டப்படாத கோவில்களில், மாற்று சமூகத்தினர் பூஜை செய்வதில் எந்த கட்டுப்பாடும் இல்லை.
இந்நிலையில், ஆகம விதிகளை கடைப்பிடிக்கும் கோவில்களை ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற நீதிபதி சொக்கலிங்கம் தலைமையிலான குழுவை, சென்னை ஐகோர்ட் சமீபத்தில் அமைத்துள்ளது.
தமிழகத்தில், 90 சதவீதத்திற்கும் மேலான கோவில்களில் ஆகம விதிகள் கடைப்பிடிக்கப்படுகிறது.
ஆனால், தமிழக அரசு அறநிலையத்துறை விதிகளில் மாற்றங்களை கொண்டு வந்து, 99 சதவீத கோவில்களில் ஆகமங்களை கடைப்பிடிக்கவில்லை என்ற நிலைய உருவாக்க முயற்சித்து வருகிறது.
அதேபோன்று, கோவில்களில் முறைப்படி பூஜைகள் நடத்த குறைந்தது ஏழு ஆண்டுகள் வரையில் பாடசாலைகளில் படிக்க வேண்டும். அதற்காக தமிழகத்தில் 10 பாடசாலைகள் உள்ளன.
முரணானது
ஆனால், ஒரே ஆண்டு மட்டும் படித்தால் போதும்; பூஜை செய்யலாம் என, அர்ச்சகர் படிப்பை ஐந்தில் இருந்து ஓராண்டாக மாற்றியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாது.
ஓராண்டு அர்ச்சகர் படிப்பில், 108 அர்ச்சனைகள் மற்றும் சில சுலோகங்களை மட்டும் தான் கற்றுக்கொள்ள முடியும்.
அந்த வகையில், 240 பேருக்கு பயிற்சி கொடுத்து அவர்கள் வாயிலாக கோவில்களில் பூஜைகள் நடத்த தமிழக அரசு முயற்சிப்பது ஆகம விதிகளுக்கு முரணானது.
ஹிந்து சமய அறநிலையத்துறை விதிகளில் கொண்டு வந்துள்ள மாற்றங்களின்படி, பூஜைகளை மாற்றுவது ஆகமவிதிப்படி தவறு.
பல நுாற்றாண்டுகளாக கோவில்களில் ஆகமங்களின் அடிப்படையில் செய்யப்படும் வழிபாட்டு முறைகளுக்கு முட்டுக்கட்டை போடுவது பக்தர்களுக்கு மனசங்கடங்களை ஏற்படுத்தும்.
மொழியின் அடிப் படையில் தமிழக அரசே மாற்ற முனைதல் வழிபாட்டு மரபுகளை அழிக்கும் செயலாகும். பாரம்பரியமாக நாம் பாதுகாத்துவரும் கோவிலின் மரபுகள் சிதைக்கப்பட்டுவிடக் கூடாது. இது, அர்ச்சகர்கள் மட்டுமின்றி பக்தர்கள் மனதையும் புண்படுத்தும்.
இவ்வாறு அவர் கூறினார்.