உலக, நாடு, தமிழக நடப்புகள் குறித்து வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்: ...
எஸ்.கார்த்திக், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:
நாட்டை நல்ல முறையில் நிர்வகித்து, மக்களின் குறைகளை தீர்த்து வைப்பர் என்ற ஆவலோடு தான், ௨௦௨௧ சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு மக்கள் ஓட்டளித்தனர். ஆனால், அந்தக் கழகம், வேண்டாத வேலை பார்ப்பதையே லட்சியமாக கொண்டு செயல்பட்டால், எங்கே சென்று முட்டிக் கொள்வது? தமிழக மக்களின் தலையெழுத்து அவ்வளவு தான் என்றே சொல்ல முடியும்.
![]()
|
ஏற்கனவே, சென்னை நந்தனத்தில் உள்ள ஒருங்கிணைந்த நிதித்துறை வளாகத்திற்கு, 'பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என்ற பெயர் சூட்டப்பட்டு, அந்த வளாகத்தில் அவரின் சிலையும் நிறுவப்பட்டுள்ளது.
அன்பழகன் நிதி அமைச்சராக இருந்தவர் என்பதால் அந்த இடத்திலும், கல்வி அமைச்சராக பணிபுரிந்தவர் என்பதால், கல்வித் துறை வளாகத்திலும், அலங்கார வளைவும், சிலையும் நிறுவ உள்ளனர்.
'பொது இடங்களில் தலைவர்களின் சிலைகளை நிறுவக் கூடாது' என்று சமீபத்தில், சென்னை உயர் நீதிமன்றம் ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது; அது, நல்ல உத்தரவே. பொது இடங்களில் தானே சிலைகளை நிறுவக்கூடாது. அரசு கட்டட வளாகங்களுக்குள் நிறுத்தினால், நீதி மன்றத்தால் என்ன செய்து விட முடியும் என்ற தைரியத்தில் வந்த விளைவு தான் இந்த சிலையும், வளைவும் அமைக்கும் திட்டம்.
அதேநேரத்தில், கழக அரசின் இந்த நடவடிக்கைக்கு, கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அனைவருக்கும் பொதுவான, ஜாதி, மத, கட்சி, இன பேதமற்ற கல்வியை வழங்கக் கூடிய துறையின் தலைமை அலுவலகத்திற்கு, கட்சி சாயம் பூசும் முயற்சி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்றும் கூறியுள்ளனர்.
![]()
|
கருத்தாவது, கண்றாவியாவது. அன்பழகனுக்கு சிலையும், வளைவும் நிறுத்தியே தீருவோம் என்ற உறுதியோடு, கழக அரசு செயல்படுகிறது.
இதே ரீதியில் போனால், கழகம் தன் ஆட்சி காலம் முடிவதற்குள், ஒவ்வொரு அரசுத்துறை அலுவலக வளாகத்திலும், அந்தந்த துறை அமைச்சர்களின் சிலைகளை -நிறுத்தி விட்டுத்தான் ஓயும்.
அதுமட்டுமின்றி, மெரினா கடற்கரை காந்தி சிலைக்கு எதிரேயுள்ள காவல்துறை வளாகத்தில் அல்லது தலைமை செயலக வளாகத்திற்குள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் சிலையை நிறுத்தினாலும் ஆச்சர்யமில்லை.