புதுச்சேரி : புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரியில் நடந்த தேசிய அளவிலான பாலின நீதி மற்றும் சமூக மாற்றம் பயிற்சி பட்டறை நிறைவு விழா நேற்று நடந்தது.
புதுச்சேரி அம்பேத்கர் அரசு சட்டக் கல்லுாரி, ராஷ்ட்ரிய உச்சதர் சிக்ஷா அபியான் சார்பில் தேசிய அளவிலான பாலின நீதி மற்றும் சமூக மாற்றம்,சச்சரவுகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நேற்று முன்தினம் (25ம் தேதி)துவங்கியது.
துவக்க விழாவில், சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரபா கிரிதேவன் பங்கேற்று, பாலின சமத்துவம், பெண்களுக்கு எதிரான குற்றங்களால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு சமூகமும், சட்டமும் ஆற்ற வேண்டிய கடமைகள் குறித்து பேசினார்.
தொடர்ந்து, பல்வேறு அமர்வுகளில் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் கீதா ராமசேஷன், அகிலா, பிரியா ரவி, உஷா, நாகசைலா, புதுச்சேரி மூத்த வழக்கறிஞர்மேத்யூஸ் வின்சென்ட் ஆகியோர் பாலின சமத்துவம் தொடர்பான பல்வேறு தலைப்புகளில் கலந்துரையாடினர்.
தொடர்ந்து, நேற்று(26ம் தேதி)நடந்த நிறைவு விழாவில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சுப்ரமணியன், இந்திய நீதித்துறையின் பாலின சமத்துவத்தை நிலை நாட்டுவதற்கு உச்ச நீதிமன்றம் வழங்கிய விசாகா தீர்ப்பை சுட்டிக்காட்டினார்.மேலும், இந்திய நீதித்துறையில் பெண்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளது எனவும் கூறினார்.
இப்பயிற்சி பட்டறை பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.
பேராசிரியர் உமா நன்றி கூறினார்.