புன்செய்புளியம்பட்டி, நவ. 27-
பழங்குடியின மக்களின் வாழ்வியல் முறைகளை அறிந்து கொள்ளும் வகையில், பவானிசாகர் வனச்சரகம், காராச்சிக்கொரை வனத்துறை சோதனை சாவடி அருகே, பழங்குடியினர் சூழல் கலாச்சார மையம் மற்றும் அருங்காட்சியகம் அமைக்க, 2018ல் அப்போதைய அரசு சார்பில், ஏழு கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு பணி நடந்தது.
மாதிரி கிராமம் அமைத்து, அவர்களது வாழ்வியல் முறை, உணவு பழக்க வழக்கம், விவசாயம், வீடு ஏற்படுத்தப்பட்டு, பழங்குடியினரின் மருத்துவ வழிமுறை, பயன்படுத்தும் இசை கருவிகள் மற்றும் அவர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்படும். சுற்றுலா பயணிகள் கண்டுகளிக்கும் வகையில் சூழல் கலாச்சார மையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
தற்போது பணி நிறைவு பெறும் தருவாயில் உள்ளது. இந்நிலையில் வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன், அருங்காட்சியகத்தை நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து பழங்குடியின மக்கள் சுயதொழில் தொடங்க, வனத்துறை சார்பில் கடனுதவி வழங்கினார். ஆய்வில் கலெக்டர் கிருஷ்ணன் உன்னி, தலைமை வன பாதுகாவலர் ராம சுப்ரமணியம், சத்தி புலிகள் காப்பக துணை இயக்குனர் கிருபாசங்கர், பவானிசாகர் ரேஞ்சர் சிவக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.