புதுடில்லி: ஜி20 கூட்டமைப்பின் தலைமைப்பதவி இந்தியாவிற்கு கிடைத்த மிகப்பெரிய வாய்ப்பு என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் பேசியதாவது: 95வது மாதத்தை எட்டியுள்ள மன் கி பாத் நிகழ்ச்சி 100வது மாதத்தை எட்ட உள்ளது. இந்திய மக்களுடன் இணைக்க இந்த நிகழ்ச்சி முக்கியமானது.

ஜி20 கூட்டமைப்பின் தலைமை பதவி இந்தியாவுக்கு கிடைத்துள்ளதற்கு பெருமை அளிப்பதாக ஏராளமானோர் எனக்கு கடிதம் எழுதி உள்ளனர். நாடு சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ள நிலையில் இந்த பொறுப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. ஜி20 தலைமை பதவி நமக்கு ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. இதன் மூலம் உலகத்தின் நன்மை, அமைதி, ஒற்றுமை ஆகியவற்றிற்கு கவனம் செலுத்த வேண்டும்.
இந்த பிரச்னைகள் தொடர்பான சவால்களுக்கு இந்தியாவிடம் தீர்வு உள்ளது. இந்த மாநாட்டிற்கு 'ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம் ' என்ற மையக்கருத்து முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய சக்திவாய்ந்த கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமை தாங்க போகிறது.
ஆளில்லா விமான துறையில் இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. கடந்த நவ.,18 ல் , 'விக்ரம் எஸ்' ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்ட போது இந்தியா விண்வெளித்துறையில் புதிய தடம் பதித்துள்ளது. இந்த ராக்கெட் தனியார் துறை மூலம் உருவாக்கப்பட்டதுடன், ஏராளமான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
நேற்று, இந்தியா மற்றும் பூடான் நாடுகள் உருவாக்கிய செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இதில் இருந்து கிடைக்கும் அதிக 'ரெசல்யுசன்' படங்கள் பூடானுக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும். இந்தியா பூடான் நாடுகளுக்கு இடையேயான வலிமையான உறவின் சின்னமாக இந்த செயற்கைக்கோள் மாறியுள்ளது.
பொறுப்பு
உலகில் பழமையான பாரம்பரியத்தின் வீடாக இந்தியா உள்ளது. இதனை பாதுகாப்பதும், அவற்றை முன்னெடுத்து செல்வதும் அனைவரின் பொறுப்பு. இதனை நிரூபிக்கும் வகையில், நாகலாந்தில் பாராட்டத்தக்க முயற்சி ஒன்று எடுக்கப்பட்டுள்ளது. இந்த முயற்சியை பாராட்டுகிறேன். நாகா சமுதாய மக்களின் வாழ்க்கை முறை , கலை, கலாசாரம் மற்றும் இசை ஆகியவை அனைவரையும் கவரும். அவர்களின் வாழ்க்கையும், திறமையும் நிலையான வாழ்க்கை முறைக்கு பெரிதும் உதவும். இந்த பாரம்பரியத்தையும், திறனையும் பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல, அம்மாநில மக்கள் 'லிடி குரோ யு' என்ற பெயரில் அமைப்பு ஒன்றை துவக்கி உள்ளனர்.
இந்த அமைப்பானது, அழிவின் விளிம்பில் உள்ள நாகா கலாசாரத்தை மீட்டெடுக்கும். நாகா இசை பாடல்கள் தொகுப்பை மீண்டும் கொண்டு வர முயன்று வருகின்றனர். இதுவரை 3 ஆல்பம்கள் வெளியிடப்பட்டுள்ளன. நாட்டுப்பாடல்கள், இசை, நடனம் தொடர்பான பயிற்சி முகாம்களையும் நடத்தி வருகின்றனர். இது குறித்து இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மூங்கில் பொருட்கள் தயாரிக்கவும் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் பாரம்பரியம் பாதுகாக்கப்படுவதுடன், வேலைவாய்ப்பும் பெருகுகிறது.
அதிகரிப்பு
இந்தியாவில் இருந்து இசைக்கருவிகள் ஏற்றுமதி 3.5 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய இசை மீது உலக நாடுகள் கொண்ட ஆர்வத்தை இது காட்டுகிறது. மின்னணு இசைக்கருவிகள் ஏற்றுமதியும் 60 மடங்கு அதிகரித்துள்ளது. இந்திய கலாசாரம் மற்றும் இசை மீதான ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகள் இந்திய இசைக்கருவிகள் இறக்குமதியில் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒருவர், அறிவை தானம் அளித்தால், அவர் சமுதாய நலனிற்கு மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கிறார் என்று அர்த்தம். இதுபோன்ற முயற்சிகளை பார்க்கும் போது மகிழ்ச்சி அளிக்கிறது. உ.பி.,யின் லக்னோவில் பன்சா கிராமத்தை சேர்ந்த ஜதின் லலித் சிங் என்பவர், அறிவு தீயை ஏற்றி வருகிறார். இதற்காக சமுதாய நூலகம் மற்றும் ஆராய்ச்சி மையத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு துவக்கி உள்ளார். 3 ஆயிரம் புத்தகங்கள் இங்கு உள்ளன. குழந்தைகள் இங்கு வந்து புதிய விஷயங்களை கற்று கொள்கின்றனர். ஆன்லைன் அல்லது ஆப்லைன் மூலம் மாணவர்களை வழிநடத்த 40 தன்னார்வலர்கள் தயாராக உள்ளனர். தினமும் 80 மாணவர்கள் இந்த மையத்திற்கு வருகின்றனர்.
ஜார்க்கண்டை சேர்ந்த சஞ்சய் கஷ்யப் என்பவர் 'நூலக மனிதர்' என்று அழைக்கப்படுகிறார். அவரது சொந்த ஊரில் நூலகம் துவக்கி உள்ளார். எந்த ஊருக்கு அவர் பணியிட மாற்றம் செய்தாலும் அங்கு , ஏழைகள் மற்றும் பழங்குடியின குழந்தைகளுக்காக நூலகம் அமைக்கும் முயற்சியில் முதலில் ஈடுபடுகிறார். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.