ஐ.ஐ.டி அல்லது ஐ.ஐ.எம்மில் படித்தவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படுமென பெங்களூரு வீட்டு உரிமையாளர்கள் நிபந்தனை விதிப்பதாக வினோத புகார் எழுந்துள்ளது.
நாட்டின் உயர் கல்வி நிறுவனங்களான ஐ.ஐ.டி - ஐ.ஐ.எம்மில் படித்தோருக்கு பேஸ்புக்கில் தனியாக மேட்ரிமோனியல் தளம் இருப்பது வினோதத்தின் உச்சம் என்று நீங்கள் நினைத்திருக்கலாம். ஆனால் அதனை மிஞ்சும் வகையில், கர்நாடக தலைநகர் பெங்களூரில் வீட்டு உரிமையாளர்கள், வீடு வாடகைக்கு வேண்டுமென்றால், ஐ.ஐ.டி அல்லது ஐ.ஐ.எம்மில் படித்தவர்களாக இருக்க வேண்டுமென நிபந்தனை விதிப்பது குறித்து டிவிட்டரில் ஒருவர் பதிவிட்டது சமூகவலைதளத்தில் வைரலானது.
வி.ஐ.டி.,யில் படித்து முடித்த பிரியான்ஷ் ஜெயின் என்பவர் பெங்களூரில் வாடகைக்கு வீடு தேடி சில புரோக்கர்களை வாட்ஸ் ஆப் மூலம் அணுகியுள்ளார். ஜெயின், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம், அல்லது தொழில் ரீதியாக சி.ஏ பட்டம் பெற்றவரல்ல என்பதால் நிபந்தனைகளை பூர்த்தி செய்யவில்லை என வீடு தர மறுத்துள்ளார். தரகர் ஒருவருடன் நடத்திய உரையாடலின் ஸ்கிரீன் ஷாட்களை டிவிட்டரில் பகிர்ந்து கொண்ட அவர், "பெங்களூரு வீட்டு உரிமையாளர்களே, நீங்கள் ஏன் இதைச் செய்கிறீர்கள்? என தன்னுடைய முன்னுரிமைகளை குறிப்பிட்டு பதிவிட்டிருந்தார்.
சாப்ட்வேர் துறையில் டெவலப்பராக ஆஸ்திரேலிய மென்பொருள் நிறுவனமான அட்லாசியானில் பணிபுரியும் ஜெயின், தான் ஒரு 'சைவ உணவு உண்பவர்' என்பதையும் குறிப்பிட்டிருந்தார். .அவர் சைவ உணவு உண்பவர் என்று குறிப்பிட்டால், அந்த வீடு கிடைப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் என்று கருதியுள்ளார். ஆனாலும், தரகர் ஜெயின் படித்த கல்வி நிறுவனத்தை கண்டுபிடிப்பதில் பிடிவாதமாக இருந்துள்ளார்.
![]()
|
மேலும் அவர் வி.ஐ.டியில் படித்தவர் என்பதை அறிந்ததும், பிளாட் வாடகைக்கு வழங்க மறுத்துவிட்டார்.பெங்களூரில் தற்போது வீட்டு உரிமையாளர்கள், வாடகைக்கு வீடு தர மதம், பாலினம், திருமண நிலை மற்றும் உங்கள் லிங்க்டு இன் சுயவிவரம் மற்றும் கல்விப் பின்புலம் ஆகியவற்றைக் கருத்தில் கொள்ள துவங்கியுள்ளனர்.
மற்றொரு பதிவில், வாட்ஸ்அப்பில் மற்றொரு தரகருடன் நடத்திய உரையாடலில், வேலை செய்யும் நிறுவனம் குறித்து விசாரித்து விட்டு, வீடு வாடகைக்கு தகுதிபெற லிங்க்டுஇன் சுயவிவர இணைப்பை கேட்டுள்ளார். இது தொடர்பான ஜெயின் பதிவு சமூகவலைதளங்கில் வைரலாக பரவியது. இதேபோன்று கடந்த 2021ல் டிவிட்டரில் பெங்களூரில் உள்ள வீட்டு உரிமையாளர்கள், தொடர்ச்சியாக சில காலமாக நிபந்தனை விதிப்பது வைரலானது.
ஜெயினின் டிவிட்டர் பதிவை தொடர்ந்து இதுபோன்ற சம்பவங்களால் பாதிக்கப்பட்ட பலரும் இதுபோன்ற நடைமுறைகள் பெங்களூரில் அதிகமாக இருப்பதாக தெரிவித்தனர். 'இது பெங்களூரில் மட்டும் நடக்கவில்லை. ஐதராபாத்திலும் தொடங்கிவிட்டது' என்று பயனர் ஒருவர் பதிவிட்டிருந்தார்.
மேலும் சிலர் பெங்களூரில் வீட்டு உரிமையாளர்களுக்கு ஆதரவாக " எந்தவொரு தாமதமும் இல்லாமல் வாடகை செலுத்த கூடிய வாடகைத்தாரரை உரிமையாளர் தேடுகிறார். எனவே தான் கல்லூரி மற்றும் பணியிடத்தின் பின்னணியை சரிபார்க்கிறார்” என்று பதிவிட்டுள்ளனர்.