கோல்கட்டா: மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள் என அம்மாநில எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி கூறியுள்ளார்.

மேற்கு வங்கத்தில் மக்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமான வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில், அந்த மாநில பாஜ., தலைவரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான சுவேந்து அதிகாரி கூறியதாவது:
சிஏஏ எனப்படும் குடியுரிமை திருத்த சட்டம் பற்றி பலமுறை, ஆலோசனை நடத்தி வருகிறோம். மே.வங்கத்தில் குடியுரிமை சட்டம் கண்டிப்பாக அமல்படுத்தப்படும், முடிந்தால் தடுத்துப் பாருங்கள்.

உரிய ஆவணங்களுடன் வசிக்கும் யாருடைய குடியுரிமையும் பறிக்கப்படாது என்று சிஏஏ சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவுக்கு புலம் பெயர்ந்த, ஆப்கானிஸ்தான், மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் சிறுபான்மையின மக்களாக இருந்த இந்துக்கள், சீக்கியர்கள், புத்தர்கள் உள்ளிட்ட மதத்தினருக்கு குடியுரிமை வழங்க சிஏஏ சட்டம் அனுமதிக்கிறது.
இந்த சட்டத்தின் கீழ், குடியுரிமை பெறுவதற்கான விதிகள் எதுவும் அரசாங்கம் முறையாக வகுக்காததால், இந்த சட்டத்தின் கீழ் யாருக்கும் இன்னும் குடியுரிமை வழங்கப்படவில்லை. மேற்கு வங்கத்தில் குடியுரிமை திருத்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.