புதுடில்லி: 2023 குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
டில்லி ராஜபாதையில் ஆண்டுதோறும் ஜன.,26 ல் நடக்கும் குடியரசு தின விழா அணிவகுப்பில் வெளிநாட்டு தலைவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பது வழக்கம்.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 2023 ஜன.,26ல் நடக்கும் குடியரசு தின விழாவில், பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை ஏற்று சிறப்பு விருந்தினராக, எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்க உள்ளார். குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் ஒருவர் பங்கேற்பது இதுவே முதல்முறையாகும்.

பழங்கால நாகரீகம், கலாசாரம் மற்றும் இரு நாட்டு மக்களுக்கு இடையேயான உறவு அடிப்படையில் இந்தியா - எகிப்து நாடுகள் சிறப்பான உறவை பகிர்ந்து கொண்டுள்ளன. இரு நாடுகளுக்கு இடையே தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 2022 - 23 காலத்தில் ஜி20 கூட்டமைப்பிற்கு இந்தியா தலைமையேற்கும் போது நட்பு நாடாக எகிப்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.