அமெரிக்காவில் பணவீக்கத்திற்கு மத்தியில், பிளாக் ஃபிரைடே ஆன்லைன் விற்பனை, தற்போது வரை 9 பில்லியன் டாலர் அளவுக்கு நடைபெற்று சாதனை படைத்துள்ளது.
அமெரிக்காவில் பணவீக்கம் உயர்வால், வங்கிகள் வட்டி விகிதங்களை மாற்றியமைப்பதால், மந்தநிலை ஏற்பட வாய்ப்புள்ளதாக முதலீட்டாளர்கள் மத்தியில் கருத்து நிலவுகிறது. ஒவ்வொரு ஆண்டின் நவம்பர் இறுதியில், வெள்ளியன்று இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் நாளை கொண்டாட பிளாக் ஃபிரைடே விற்பனை களைகட்டும். நிறுவனங்கள், ஸ்மார்ட்போன்கள் முதல் பொம்மைகள் வரை சலுகைகளை வாரி வழங்கும்.
இந்தாண்டு பணவீக்கத்தின் பாதிப்பு இருந்த போதும், நுகர்வோர்களின் ஆர்வம் குறையவில்லை. அக்டோபரில் இருந்து சலுகை விற்பனை துவங்கியிருந்தாலும், பாரம்பரியமாக பெரிய ஷாப்பிங் நாட்கள் வரும் வரை வாடிக்கையாளர்கள் தள்ளுபடிக்காக காத்திருந்தனர்.
இணையத்தளங்களில் பரிவர்த்தனைகளை பகுப்பாய்வு செய்து இ-வணிகத்தை அளவிடும் அடோப் குழுமத்தின், அடோப் அனலிடிக்ஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பிளாக் ஃபிரைடே விற்பனை துவங்கிய வெள்ளியன்று 9.12 பில்லியன் டாலர்களை ஆன்லைனில் செலவழித்துள்ளனர். பிளாக் பிரைடே அன்று ஆன்லைனில் செலவிடுவது 2.3 சதவீதம் அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள டாப் 100 ஆன்லைன் விற்பனை தளங்களில் 85 சதவீதம் ஆர்டர்கள் வந்துள்ளது.
![]()
|
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக கோவிட் காரணமாக நேரடியாக கடைகளில் ஷாப்பிங்கைக் குறைத்த பின்னர், நடப்பாண்டு வாடிக்கையாளர்கள் கடைகளுக்கு அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது, ஆனால்
வெள்ளியன்று அமெரிக்காவின் சில பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்ததால் கடைகளில் வழக்கத்தை விட குறைவான கூட்டமே இருந்தது. இதனையடுத்து அமெரிக்கர்கள், பொருட்களை வாங்குவதற்கு ஸ்மார்ட்போன்களை நோக்கி கவனத்தை திருப்பினார்கள். அடோப்பின் தரவுகளின்படி மொபைல் ஷாப்பிங் மூலம் டிஜிட்டல் விற்பனை, 48 சதவீதம் நடைபெற்றுள்ளது.