அமெரிக்காவில் கடன் சுமை அதிகரிப்பால், பர்னிச்சர் நிறுவனம், ஒரே இரவில் தனது ஊழியர்கள் அனைவரையும் கூண்டோடு பணிநீக்கம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
அமெரிக்காவின் மிசிசிப்பியை சேர்ந்த யுனைடெட் பர்னிச்சர் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், 1993 முதல் இயங்கி வருகிறது. இதில் சுமார் 2,700 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். நன்றி தெரிவிக்கும் நாள் துவங்குவதற்கு ஒரு சில நாட்கள் இருக்கும் சூழலில், ஊழியர்களுக்கு, நிறுவனத்திடம் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.
இரவு 11.30 மணியளவில், பணிநீக்கம் செய்யப்பட்டதாக வந்த குறுஞ்செய்தியை முதலில் ஜோக் என நினைத்துள்ளனர். மேலும் பர்னிச்சர் டெலிவரிக்கு சென்ற டிரைவர்களும் உடனடியாக தங்களது வீட்டுக்கு திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மின்னஞ்சல் மற்றும் குறுஞ்செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:-
இயக்குநர்கள் குழுவின் அறிவுறுத்தலின் பேரில், எதிர்பாராத வர்த்தக சூழ்நிலைகள் காரணமாக, நிறுவனம் அதன் அனைத்து ஊழியர்களின் வேலைவாய்ப்பை உடனடியாக நீக்குவதற்கான கடினமான முடிவை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
![]()
|
'ஊழியர்கள் பணிநீக்கத்திற்கு, நிறுவனத்தின் கடன் சுமை அதிகரித்ததே காரணமாக கூறப்படுகிறது. எனினும் பல ஆண்டுகளாக நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றிய குடும்பங்கள் கூட காப்பாற்றப்படவில்லை. இதனால் ஊழியர்கள் கடும் கோபத்தில் உள்ளனர். பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த 3 பேர் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர்' என ஃபிரைட்வேவ்ஸ் என்ற செய்தி இணையதளம் தெரிவித்துள்ளது.
மைக்ரோசாப்ட், பேஸ்புக், டிவிட்டர் போன்ற முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் வரிசையில் அமெரிக்க பர்னிச்சர் நிறுவனம் ஒரே இரவில் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய சம்பவம், அங்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.