சிலருக்கு தனிமையில் நேரத்தை கழிக்கப் பிடிக்கும். தனியாக இருந்தால் பிடித்த இதழ், புத்தகத்தைப் படிக்கலாம். ஸ்மார்ட்போனில் சமூக வலைதளங்களை வலம்வரலாம், பாட்டு, எஃப்எம் கேட்கலாம். பிடித்த இசைக்கருவியை வாசிக்கலாம், பிடித்த விளையாட்டு அல்லது உடற்பயிற்சியை செய்யலாம். அல்லது வீட்டை சுத்தப்படுத்தி பொருட்களை ஒழுங்குபடுத்தலாம். தனிமையில் இருக்கும்போது நாம் நமக்குப் பிடித்த பாடலை வாய்க்குள் லேசாக முணுமுணுப்பதைத் தவிர பெரும்பாலும் அதிகம் பேச மாட்டோம். குளியலறையில் தனிமையில் இருக்கும்போது சிலர் பாடுவது, நடனமாடுவது, சில வேடிக்கையான கோணங்கித்தனங்கள் செய்வது உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுவர். சிலர் காலை தனிமையில் தேநீர் அருந்துவர்.
![]()
|
தனிமை சில வேளைகளில் நமக்கு என்ன தேவை என்பதை உணர்த்தும் கருவியாக செயல்படுகிறது. தனிமையில் சிலர் தங்களைத் தாங்களே உணர வாய்ப்பும் கிடைப்பதுண்டு. சமூகத்தில் இருந்து தொடர்பற்று தனிமையில் பணியாற்றும் இளைஞர்கள், இல்லத்தரசிகள், முதியவர்கள் உள்ளிட்டோர் தனிமையில் உள்ள நிம்மதியை உணருவர்.
![]()
|
இன்றைய இணைய யுகத்தில் ஸ்மார்ட்போன், ஸ்மார்ட் டிவி, வைஃபை, மடிக்கணினி உள்ளிட்டவை உடன் இருப்பதால் தனிமையில் இருந்தாலும் நாம் வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதை உடனுக்குடன் அறிய முடிகிறது. எனவே தனிமையில் உள்ளவர்கள் ஆளில்லா தீவில் வசிப்பதுபோல முழுவதுமாக சமூகத்தில் இருந்து தனிமைப்படுத்தப்பட்டதாகக் கூற முடியாது.
![]()
|
ஒரு நாளில் சில மணிநேரம் தனிமையில் இருப்பதால் உளவியல் ரீதியாக நம் மனதுக்குப் பலவித நன்மைகள் உள்ளன. அலுவலகம், பொது இடங்களில் நாம் மணிக்கணக்கில் நம்மைச் சுற்றி இருப்பவர்களுடன் பேசுவதால் நமது உடல் அயர்ச்சி அடைகிறது. வோக்கல் கார்டு என்னும் குரல் வளையின் மிருதுவான தசைகள் சோர்வடைகின்றன. இதனால் மூளையில் ஆக்ஸிஜன் அளவு குறைகிறது.
நாள் முழுவதும் ஓயாமல் உழைத்து, களைத்து வீடு திரும்பும் அலுவலகப் பணியாளர்கள் தூங்கும் நேரத்தையே தங்களுக்கான தனிமை நேரமாகக் கருதுகின்றனர். ஆனால் நீங்கள் எட்டு மணிநேரம் தூங்கும் நேரம் தனிமை நேரமாகாது. தூங்கும் நேரத்தை அடுத்து காலை இரண்டு மணி நேரம் தனிமையில் உங்களுக்குப் பிடித்த வேலைகளைச் செய்தால் உங்கள் மனதின் குரல் உங்களுக்குக் கேட்கும்.
இதனையடுத்து உண்டாகும் புத்துணர்ச்சி காரணமாக அன்றைய நாளில் மேலதிகாரி உட்பட பலரை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைத்துவிடும். எனவே தனிமை மனதிற்கான ஓர் சிறந்த மருந்தாக அமைகிறது. அதே சமயத்தில் தனிமை எப்போதும் நல்ல பலன்களை மட்டுமே தருமெனக் கூற முடியாது.
![]()
|
அளவுக்கதிகமான தனிமை ஆபத்தில் முடிய வாய்ப்புண்டு. நாட்கணக்கில் வீட்டினுள் தனிமையில் இருப்பவர்கள் மன அழுத்தத்துக்கு உள்ளாவது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக 70 வயதைக் கடந்த நாள்பட்ட நோய்த் தாக்கம் கொண்ட முதியோர்களை வீட்டில் உள்ள இளம் தலைமுறையினர் கண்டுகொள்ளாமல் புறக்கணிப்பதால் அவர்கள் அதீத மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். தனிமை, தூக்கம் இரண்டுமே தேவைதான். ஆனால் அவை அளவுக்கதிகமாகச் செல்லாமல் பார்த்துக்கொள்வது ஆரோக்கியமானது.