புதுடில்லி: டில்லியின் வளர்ச்சி குறித்து, ஆம் ஆத்மி கவலைப்படவில்லை என பாஜ., தேசிய தலைவர் நட்டா கூறியுள்ளார்.

டில்லியில் முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் டில்லியில் மாநகராட்சி தேர்தல் வரும் டிசம்பர் 4ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் ஆம்ஆத்மி வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
மாநகராட்சியை கைப்பற்ற அந்த கட்சி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இதில் பா.ஜ.. மற்றும் ஆளும் ஆம் ஆத்மி இடையே கடும் போட்டி காணப்படுகிறது. இரு கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
அந்த வகையில், பாஜ., தேசிய தலைவர் ஜே.பி நட்டா வஜிர்பூர் பகுதியில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொண்டு பேசியவதாவது: டில்லி மக்கள் மாநகராட்சி தேர்தலில் பாஜ., வுக்கு ஓட்டளிக்க ஆர்வமாக உள்ளனர். ஆம் ஆத்மியின் செயல்பாடுகளால் பொதுமக்கள் வருத்தமடைந்து, பாஜ., வை பாராட்டி வருகின்றனர்.
ஆம்ஆத்மி கட்சி தலைவர்கள் நேர்மையானவர்கள் என்று சொல்லிக் கொண்டிருந்தனர். ஆனால் சத்யேந்திர ஜெயின் இன்று ஊழல் வழக்கில் சிறையில் இருக்கிறார். அவர்கள் திகார் சிறையில் ஒரு மசாஜ் சென்டரை திறந்து, பாலியல் குற்றவாளியை பிசியோதெரபிஸ்டாக மாற்றியுள்ளனர். டில்லியின் வளர்ச்சி குறித்து, ஆம் ஆத்மி கவலைப்படவில்லை. இவ்வாறு அவர் பேசினார்.
