புதுடில்லி: 'ஆடை அணியாவிட்டாலும் பெண்கள் அழகாக தெரிகிறார்கள் ' என யோகா குரு பாபா ராம்தேவ் பேசியதற்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது. அவருக்கு மஹாராஷ்டிரா மாநில பெண்கள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மன்னிப்பு கேட்க வேண்டும் என டில்லி பெண்கள் கமிஷன் வலியுறுத்தி உள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் தானேயில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய யோகா குரு பாபா ராம்தேவ், '' பெண்கள் புடவையில் அழகாக இருக்கிறார்கள்.சல்வார் உடையிலும் அழகாக இருக்கிறார்கள். என் பார்வையில் அவர்கள் ஒன்றும் அணியாமல் இருந்தாலும் அழகாக இருக்கிறார்கள் எனக் கூறியிருந்தார். இவரது இந்த பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியது.

திரிணமுல் காங்கிரஸ் எம்.பி., மஹூவா மொய்த்ரா கூறுகையில், ராம்லீலா மைதானத்தில் இருந்து ராம்தேவ் ஏன் பெண்களின் உடையில் ஓடினார் என்பது இப்போது எனக்கு தெரியும் எனக்கூறினார். தேசியவாத காங்கிரஸ் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. டில்லியில் பெண் தொழிலாளர்கள் ராம்தேவ் புகைப்படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தனர்.
மஹா., சட்டசபை துணைத்தலைவர் நீலம் கோர்கே கூறுகையில், பெண்களிடம் இத்தகைய இளிவான அணுகுமுறையை ராம்தேவ் கொண்டுள்ளார். அது மிகவும் தவறானது. எல்லா ஆண்களும் பெண்களை இப்படி பார்ப்பதில்லை. நம் நாட்டில் தாங்களே குரு என்று சொல்லி கொள்ளும் பல ஆண்கள் இது போன்ற அநாகரீகமான கருத்துகளை தெரிவித்திருப்பது வெட்கக்கேடானது எனக்கூறினார்.
மஹா., மாநில மகளிர் ஆணையத்தின் தலைவர் ரூபாலி சகாங்கர், ராம்தேவுக்கு அனுப்பிய நோட்டீசில், பெண்கள் பற்றிய சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் எனக்கூறியுள்ளார். பெண்களின் கண்ணியத்தையும், கவுரவத்தையும் கெடுக்கும் வகையில் அநாகரீகமான வகையில் ராம்தேவ் கருத்து தெரிவித்துள்ளதாக புகார் வந்துள்ளதாகவும் கூறியுள்ளார்.
இதேபோல் டில்லி பெண்கள் ஆணையத்தின் தலைவர் சுவாதி மாலிவலும், ராம்தேவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன் மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.