வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சூரத்:27 ஆண்டுகளுக்கு பின் குஜராத் மக்களுக்கு விடுதலை கிடைக்க போகிறது என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
குஜராத் மாநிலம் சூரத் நகரில் நிருபர்களை சந்தித்த கெஜ்ரிவால் கூறியதாவது: டில்லி மற்றும் பஞ்சாப் தேர்தலுக்கு முன் கணித்தது நடந்தது. அதேபோல், குஜராத்திலும் நடக்கும். எனது கணிப்பை எழுதி உங்கள் முன் எழுதி தருகிறேன். குறித்து வைத்து கொள்ளுங்கள். குஜராத்தில் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்க போகிறது.பாஜ.,வின் தவறான நிர்வாகத்தில் இருந்து 27 ஆண்டுகளுக்கு பின் குஜராத் மக்களுக்கு விடுதலை கிடைக்க போகிறது என்றார். அப்போது தனது கணிப்லை பேப்பரில் எழுதி நிருபர்களிடம் காண்பித்தார்.
தொடர்ந்து கெஜ்ரிவால் பேசியதாவது: பா.ஜ., மீது மக்களுக்கு பயம் உள்ளது. இதனால் ஆம் ஆத்மிக்கு ஆதரவு உள்ளதை அவர்கள் மறைக்கின்றனர். மாநிலத்தில் ஆட்சி அமைத்ததும் பழைய பென்சன் திட்டத்தை மீண்டும் கொண்டு வருவோம். இதற்கான அறிவிப்பை ஜன.,31 அன்று கொண்டு வருவோம். இதனை நான் சும்மா சொல்லவில்லை. பஞ்சாபில் அதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளோம்.

கடந்த 27 ஆண்டுகளில் முதன்முறையாக பா.ஜ., போராட்டத்தை எதிர்கொள்கிறது. இதற்கு தோற்றுவிடுவோம் என்ற பயம் அக்கட்சிக்கு உள்ளது. இந்த போட்டியில் காங்கிரஸ் தென்படவில்லை. தெருவில் நீங்கள் சென்று யாருக்கு ஓட்டு போடுவீர்கள் எனக்கேட்டால், பாஜ., அல்லது ஆம் ஆத்மி எனக்கூறுவார்கள். இவ்வாறு கெஜ்ரிவால் கூறினார்.