
காசி
கிட்டத்தட்ட 23 ஆயிரம் ஆலயங்களைக் கொண்ட பழம்பெரும் கோவில் நகரம்.
3ஆயிரம்து 500 ஆண்டுகளுக்கும் முந்தையது என்ற பாராம்பரிய பெருமை கொண்ட நகரம்.
பாரதத்தின் பழமையை செழுமையை பண்பாட்டை உலகிற்கு எல்லாம் பறைசாட்டும் ஆன்மீக நகரம்.
கரை புரண்டோடும் வற்றாத கங்கை நதியைக் கொண்ட வரலாற்று சிறப்பு மிக்க நகரம்

கங்கையின் மேற்கு கரையில் குடிகொண்டுள்ள காசி விசுவநாதர் என்று வணங்கப்படும் சிவத்தலமே நாட்டில் உள்ள சிவத்தலங்களில் எல்லாம் புனிதமான தலமாக வணங்கப்படுகிறது.
இங்குள்ள மூலவர் காசி விசுவநாதர் எல்லையில்லா கருணையும் பேரன்பும் ஆனந்தமும் அள்ளித்தருவதால் இந்த தலத்திற்கு ஆனந்த பவனம் என்றும் அழைக்கப்படுகிறது.
மூலவர் மரகதப்பெருமான் காசி விசுவநாதருடன் விசாலாட்சியும் அம்பாளும் அன்னபூரணி தாயாரும் வற்றாத அருள் சுரக்கும் இந்துக்களின் அதி உன்னத ஸ்தலம்.
பன்னிரு ஜோதிர்லிங்க தலங்களில் இதுவே சிறப்பானதும் முதன்மையானதுமான தலமாக போற்றப்படுகிறது

பாரதியை மகாகவி பாரதியாக மாற்றுவதற்கான சக்தியையும் உத்வேகத்தையும் தந்த இடம் இதனால் "இன்னது நீர்க்கங்கை யாறு எங்கள் ஆறே இங்கிதன் மாண்பினுக்கு எதிரெது வேறே'' என்று கங்கைக்கு தனது கவிதையால் மகுடம் சூடி புகழ்ந்தார்.
வாழ்வதற்காக ஏங்கும் மனித கூட்டத்திற்கு நடுவே மரணத்தை வரவேற்று காத்திருக்கும் வித்தியாசமான பூமி
நமது நாட்டில் நிலவும் அனைத்து கலாச்சார கல்வி கேள்வி புராணங்களின் மையப்புள்ளியாக வழங்கும் நகரம்.
சங்கராச்சார்யார் , சுவாமி விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர் , குருநானக், சுவாமி தயானந்தா சரஸ்வதி போன்ற மகான்கள் பலரும் இங்கு வந்து கங்கையில் நீராடி, லிங்க தரிசனம் செய்ததை பாக்கியமாக கருதியவர்களே
இந்துக்களாக பிறந்த ஒவ்வொருவரும் தங்கள் பாதத்தை ஒரு முறையாவது காசியில் பதிக்கவேண்டும் எல்லா துறவிகளாலும் ரிஷிகளாலும் அடையாளம் காட்டப்பட்டுள்ள சொர்க்த்தை தரும் பூமி
இத்தனை பெருமைக்கும் அருமைக்கும் உரிய காசிக்கும் தமிழ்நாட்டிற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு இங்குள்ள தென்காசியும்,சிவகாசியும் அதற்கு ஒரு உதாரணம் மேலும் காசியில் குடிகொண்டுள்ள காசி விசுவநாதர் பெயர் தமிழகத்தில் பரவலாக வைக்கப்படும் பெயர்களில் ஒன்றாகும்.
தமிழகத்தை சேர்ந்தவர்கள் பலரும் தங்கள் மூதாதையருக்கான காரியங்களை நிறைவேற்ற காலம் காலமாக காசிக்குதான் செல்கின்றனர் இவர்களுக்காக சேவை செய்வதற்காக தமிழகத்தில் இடம் பெயர்ந்த பலர் மூன்று தலைமுறைக்கு மேல் காசிவாசியாகவே வாழ்ந்துவருகின்றனர்.
இப்படி வருபவர்களை குறைந்த செலவில் தங்கவைப்பதற்காக தமிழகத்தை சேர்ந்த பல மடங்களின் கிளைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன
தீபாவளி நாட்களில் கங்கையில் நீராடுவதற்காக தமிழகத்தில் இருந்து வருபவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் கூடிக்கொண்டே செல்கிறது.
‛அனுமன் காட்' என்று சொல்லக்கூடிய இடத்திற்கு சென்றீர்கள் என்றால் வடமாநிலத்தில் இருக்கிறோமோ அல்லது தமிழ்நாட்டின் மைலாப்பூரில் இருக்கிறோமோ என்று ஐயம் கொள்ளும் அளவிற்கு தமிழ் பேசுபவர்கள் நிறைந்து காணப்படுவர்.
இங்குள்ள கோவில்களின் சாயல்களும் , நடைபெறும் வழிபாட்டு முறைகளையும் பார்க்கும் போது காசிக்கும் தமிழகத்திற்கும் நிறைய ஒற்றுமைகள் இருப்பதை காணலாம்.
சரி இதெல்லாம் இப்போது எதற்காக என்கிறீர்களா
இவ்வளவு சிறப்பு வாய்ந்த காசிக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் மாத மாதம் போய்வரக்கூடியவர்கள் பலர் உண்டு அதே நேரம் ஒருமுறையாவது காசியை தரிசிக்கும் சந்தர்ப்பம் கிடைக்காத என்று ஏங்குபவர்களும் உண்டு.
அப்படிப்பட்டவர்களின் ஏக்கத்தை போக்குவதற்காக விருப்பத்தை நிறைவேற்றுவதற்காக காசியில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு காசி தமிழ் சங்கத்தினர் தமிழ்நாட்டில் இருந்து 2ஆயிரம்500 பேர்களை இலவசமாக பங்கேற்க செய்துள்ளனர்.
மூன்றடுக்கு குளிர்சாதன வசதி கொண்ட ரயிலில் தமிழ் தெரிந்த வழிகாட்டியின் உதவியுடன் அழைத்துச் சென்று உணவு உறைவிடம் கொடுத்து தமிழ் சங்கமத்தில் பங்கு பெறும்வாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
கடந்த நவம்பர் 16 ந்தேதி துவங்கிய இந்த காசி தமிழ சங்கமம் நிகழ்வு வருகின்ற டிசம்பர் 17 ந்தேதி வரை மத்திய அரசின் ஆதரவுடன் நடைபெற உள்ளது
இந்த ஒரு மாத காலத்திற்கு காசி மாநகரம் தமிழர்களின் பல்வேறு கலை கலாச்சார நிகழ்வுகளை காணவிருக்கிறது
முயற்சித்தால் தமிழ்ப்பற்றாளர்கள் யார் வேண்டுமானாலும் காசிக்கு சென்று இந்த ஒரு மாத கால தமிழ் சங்கமம் நிகழ்வில் கலந்து கொண்டு சங்கமிக்கலாம்...
-எல்.முருகராஜ்