சர்வதேச நாடுகளை பொருளாதார தேக்க நிலை தொடர்பான அச்சம் வாட்டிக்கொண்டிருக்கும் நிலையில், இந்தியா உள்ளிட்ட ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் வரும் ஆண்டில் தேக்க நிலை வராது என சர்வதேச ரேட்டிங் நிறுவனம் 'மூடிஸ்' தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீதான ரஷ்யா தாக்குதல் உள்ளிட்ட காரணங்களால், சர்வதேச அளவில் பொருளாதார தேக்க நிலை உண்டாகலாம் என கணிப்புகள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் மூடிஸ் நிறுவனம், ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் தேக்க நிலை வராது; ஆனால் வளர்ச்சி மந்தமாகும் என தெரிவித்துள்ளது.
இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பொது முடக்கம் விலக்கப்பட்ட பிறகு விரிவாக்கம் நிகழ்ந்து வந்தாலும், சர்வதேச பொருளாதார போக்கின் தாக்கம் காரணமாக வளர்ச்சி மெதுவாக நிகழும் என மூடிஸ் ஆய்வு தெரிவித்துள்ளது.
ஐரோப்பா மற்றும் வட அமெரிக்க நாடுகளில் பொருளாதார சுணக்கம் காரணமாக, வரும் ஆண்டு பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள சுணக்கமும் இதற்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையில் சர்வதேச நிதியமும், உலக பொருளாதார வளர்ச்சி மந்தமாகும் என தெரிவித்திருந்தது.