கோவை:மேற்கு தொடர்ச்சி மலையோர கிராமங்களில், கடந்த சில நாட்களாக யானைகளின் ஊடுருவல் அதிகரித்து வருகிறது. இதுதொடர்பாக, தொடர்ந்து வனத்துறையினரிடம் அப்பகுதி விவசாயிகள் முறையிட்டு வருகின்றனர்.
வனத்துறையினரும் காட்டு யானைகளின் ஊடுருவலை கட்டுப்படுத்த, பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். எனினும், காட்டு யானைகளின் வருகையை முழுமையாக கட்டுப்படுத்த இயலவில்லை.
நேற்று முன்தினம் இரவு, கோவை வனச்சரகத்திற்கு உட்பட்டவரப்பாளையம் பகுதியில் உள்ள நடராஜன், தமிழரசன் என்பவர்களது தோட்டத்துக்குள், 10 காட்டுயானைகள் புகுந்தன.
தொடர்ந்து, அப்பகுதியில் இருந்த வாழைகளை மிதித்து கீழே தள்ளியது. குலையுடன் இன்னும் சில தினங்களில் விற்பனைக்கு தயாராக இருந்த பல வாழை மரங்கள் நாசமானது, விவசாயிகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
விவசாயிகள் கூறும்போது, 'யானைகள் ஊருக்குள் வந்த தகவல் கொடுத்து, நீண்ட நேரம் கழித்தே வனத்துறையினர் வருகின்றனர். சேதமடைந்த வாழைகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். வனத்துறையினர் யானை ஊடுருவலுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்' என்றனர்.
Advertisement