கோவை:எந்தவித முன் அனுமதியுமின்றி, ஆளுங்கட்சியின் பெயரை கூறி, வைக்கப்பட்ட டீக்கடை பெட்டியால் கோவை அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.
கோவை அரசு மருத்துவமனையின் பிரதான நுழைவாயில் அருகே, பார்வையாளர்கள் காத்திருக்கும் பகுதியில் டீக்கடைக்கான பெட்டி ஒன்று வைக்கப்பட்டது. அனுமதி பெறாமல் வைக்கப்பட்ட இந்த பெட்டியால், அதிர்ச்சி அடைந்த மருத்துவமனை நிர்வாகம் இதுகுறித்து விசாரணை நடத்தியது.
விசாரணையில், இரு தினங்களுக்கு முன் மருத்துவமனைக்கு வந்த நபர்கள், செக்யூரிட்டிகளிடம் ஆளுங்கட்சி பிரமுகர்கள் எனக்கூறி பெட்டியை கொண்டு வைத்து சென்றுள்ளது தெரிந்தது.
மருத்துவமனை டீன் நிர்மலா கூறுகையில்,''ஆளுங்கட்சியின் பெயரை கூறி பெட்டியை வைத்து சென்றுள்ளனர். அதனால் செக்யூரிட்டிகள் கேள்வி எழுப்பவில்லை. உள்ளே என்ன இருக்கிறது என தெரியவில்லை. போலீசாரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது வரை பெட்டிக்கு உரிமை கோரி யாரும் வரவில்லை,'' என்றார்.