ஆமதாபாத்:குஜராத் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் 1,621 வேட்பாளர்களில், 139 பெண்கள் மட்டுமே களத்தில் உள்ளனர். மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் பெண்களின் பிரதிநிதித்துவம் மிகவும் குறைவாக இருப்பதாக அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
![]()
|
குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு அடுத்த மாதம், 1 மற்றும் 5 ஆகிய தேதிகளில் சட்டசபை தேர்தல் நடக்கிறது.
ஆளும் கட்சியான பா.ஜ., மற்றும் காங்கிரஸ்,ஆம் ஆத்மி, பகுஜன் சமாஜ் உட்பட தேசிய மற்றும் மாநில கட்சிகள் களம் இறங்கியுள்ளன.
மொத்தம் உள்ள 182 தொகுதிகளிலும் 1,621 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில் 139 பேர் மட்டுமே பெண்கள்.
அதிலும் 56 பெண்கள் சுயேச்சையாக போட்டியிடுகின்றனர். அரசியல் கட்சிகள் 83 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியுள்ளன.
பா.ஜ., - 18, காங்கிரஸ்- 14, ஆம் ஆத்மி - 6, பகுஜன் சமாஜ் -- 13, மஜ்லிஸ்- - இ- - இத்தே ஹாதுல் முஸ்லிமின் - 2 பெண்களுக்கு தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை வழங்கியுள்ளன.
![]()
|
கடந்த 2017ல் நடந்த தேர்தலில் பா.ஜ., 12 பெண்களுக்கும், காங்கிரஸ் 10 பெண்களுக்கு மட்டுமே தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பு வழங்கியிருந்தன.
இரு கட்சிகளும் இந்த முறை அதைவிட அதிகமாகவே பெண்களுக்கு வாய்ப்பு வழங்கி இருந்தாலும், மொத்த வேட்பாளர்களின் எண்ணிக்கையில் கணக்கிடும்போது 139 பெண்கள் என்பது மிகவும் குறைவாக உள்ளதாக, அரசியல் நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement