அருப்புக்கோட்டை: தந்தையை எரித்துக் கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியைச் சேர்ந்தவர் பாக்கியராஜ், 63. இவரது மகன் குருமூர்த்தி, 32.
பாக்கியராஜ் வசிக்கும் வதுவார்பட்டிக்கு பக்கத்து ஊரான வாழ்வாங்கியில், குருமூர்த்தி வசிக்கிறார். மகனுக்கு புதிதாக டிராக்டர் வாங்கி கொடுத்து பராமரிக்குமாறு பாக்யராஜ் கூறி உள்ளார். இதன் வாயிலாக தினமும் கிடைக்கும் வருவாயில், 1,000 ரூபாய் தருமாறு மகனிடம் கேட்டுள்ளார்.
ஒரு வாரமாக குருமூர்த்தி, பாக்கியராஜுக்கு பணம் தரவில்லை. இது குறித்து பாக்கியராஜ் நவ., 25ல், மொபைல் போனில் கேட்ட போது, இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அன்று இரவு பாக்கியராஜ் வீட்டிற்கு சென்று, அவர் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்து விட்டு குருமூர்த்தி ஓடி விட்டார். மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாக்கியராஜ், நேற்று இறந்தார்.
பந்தல்குடி போலீசார் குருமூர்த்தியை கைது செய்து விசாரிக்கின்றனர்.