தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி: நம் வரிப்பணம் பெற்று, நம் செலவில் உட்கார்ந்துள்ள கவர்னர், ராஜ்பவனில் கூட்டம் நடத்தி, 'திராவிடம் என்ற நாடே கிடையாது' என்கிறார். அவரும் ஐ.பி.எஸ்., படித்து விட்டு தான் வந்துள்ளார். ஐ.பி.எஸ்., படித்து வேலையை விட்டு அரசியலுக்கு வருபவர்கள், 'மென்டலாக' தான் இருப்பர் போல. தி.மு.க., மோசமான கட்சி. இந்த கட்சிக்கு எவனாவது துரோகம் செய்தால், ஒன்று கோர்ட்டுக்கு செல்ல வேண்டும். இல்லையெனில், கை, கால் இல்லாமல் போய் விடும்.
டவுட் தனபாலு: தி.மு.க.,வின் மூத்த நிர்வாகி, கவர்னரையே, 'கை, காலை எடுத்துடுவேன்'னு மிரட்டுகிறார் என்றால், இந்த அரசில் சாமானிய மக்களுக்கு என்ன பாதுகாப்பு கிடைக்கும்... மத்திய அரசு, இதுபோன்ற மிரட்டல் பேர்வழிகளை திஹார் ஜெயிலில் துாக்கி போட்டு, 'நொங்கு' எடுத்தால் தான், அடங்குவாங்க என்பதில், 'டவுட்'டே இல்லை!
மக்கள் நீதி மய்யம் தலைவரும், நடிகருமான கமல்: இதற்கு முன் பல விபத்துகளை சந்தித்துள்ளேன். அப்போது கூட, 'ஷூட்டிங் எப்போது; அடுத்த படம் எப்போது ரிலீஸ்...' என்று தான் கேட்பர். இப்போது லேசான இருமல் என்றால் கூட, என்னைப் பற்றி பெரிய அளவில் செய்தி வெளியாகிறது. இதற்கு காரணம் ஊடகம்; பெருகியிருக்கும் அன்பு என நம்புகிறேன்.
டவுட் தனபாலு: இவ்வளவு விளம்பரம் கொடுத்தும் அரசியலில் ஜெயிக்க முடியலையே... இதுவும் கிடைக்கலைன்னா அரசியலில் நீங்க இருக்கிற இடமே தெரியாது என்பதில், 'டவுட்'டே இல்லை!
பா.ம.க., தலைவர் அன்புமணி: ஓசூர் அருகே அமைக்கப்படும், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' தொழிற்சாலையில் வெளி மாநிலத்தவருக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது. தமிழகத்தின் வேலைவாய்ப்புகள் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். அதற்காக, தனியார் நிறுவனங்களில் தமிழர்களுக்கு, 80 சதவீத வேலைவாய்ப்பு வழங்க வகை செய்யும் சட்டத்தை, வரும் ஜனவரியில் நடக்கவுள்ள சட்டசபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும்.
டவுட் தனபாலு: இப்படி சட்டம் இயற்றுவதால் தொழில் துறை பாதிக்கப்படும் என்பதும், பிற மாநிலங்களுடனான நட்புறவு பாதிக்கும் என்பதும், மத்திய அமைச்சராக இருந்த அன்புமணிக்கு தெரியாதோ என்ற, 'டவுட்' வருதே!