டேராடூன்:நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த வேண்டும் என தீவிர பிரசாரம் செய்த தனி மனிதனின் முயற்சிக்கு பலனாக, உத்தரகண்ட் கிராமம் ஒன்றில் ஏழே மாதங்களில் 3,500 குளங்கள் வெட்டப்பட்டுள்ளன.
உத்தரகண்ட் மாநிலத்தில் முதல்வர் புஷ்கர் சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, சம்கோட் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் துவாரிகா பிரசாத் செம்வால். சமூக ஆர்வலரான இவர், தன் கிராமம் மட்டுமின்றி உத்தரகண்டின் பல பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து வருவதை அறிந்து மிகவும் கவலை அடைந்தார்.
இதையடுத்து, 'கல் கே லியே ஜல்' அதாவது 'நாளைய தேவைக்கான தண்ணீர்' என்ற பிரசாரத்தை கடந்த ஏழு மாதங்களுக்கு முன் துவக்கினார். சம்கோட் கிராமத்தில் வீடு வீடாகச் சென்று விழிப்புணர்வு பிரசாரம் செய்தார். துவக்கத்தில் இவரது பிரசாரத்துக்கு கிராம மக்கள் செவி சாய்க்கவில்லை. ஆனால் துவாரிகா பிரசாத்தும் மனம் தளரவில்லை.
தன் இரு மருமகள்களின் பிறந்த நாளின்போது, அவர்களது பெயரில் இரண்டு சிறிய குளங்களை வெட்டினார். மேலும், தன் பிரசார உத்தியையும் மாற்றினார். 'பிறந்த நாள், திருமண நாள் உள்ளிட்ட வீட்டு விசேஷங்களின் போது, அதன் நினைவாக உங்கள் வீட்டுக்கு அருகிலேயே சிறிய குளங்களை வெட்டுங்கள். 'அது உங்களுக்கு மட்டுமின்றி பறவைகள் மற்றும் விலங்குகளுக்கும் உதவும்' என, பிரசாரம் செய்யத் துவக்கினார்.
இந்த முயற்சிக்கு பலன் கிடைக்கத் துவங்கியது. மேலும், முதல்வர் புஷ்கர் சிங் தாமியின் பிறந்த நாளை முன்னிட்டு குளம் வெட்டுமாறு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக் கொண்ட தாமி, டேராடூனில் துத்லி வனப்பகுதியில் ஒரு குளம் வெட்டிஉள்ளார். கிராம மக்களும் தங்கள் வீட்டு விழாக்களின் போது குளங்களை வெட்டி மழை நீரை சேமிக்கத் துவக்கி உள்ளனர்.
துவாரிகா பிரசாத்தின் முயற்சியால், கடந்த ஏழே மாதங்களில் சம்கோட் கிராமத்தில் 5 அடி அகலம் 1.5 அடி ஆழம் உடைய, 3,500 குளங்கள் வெட்டப்பட்டுள்ளன. இந்த செய்தியை அறிந்த ஏராளமானோர் சமூக வலைதளங்களில் துவாரிகாவுக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர். உத்தரகண்ட் மாநிலம் முழுதும் தன் பிரசாரத்தை விரிவாக்கம் செய்ய துவாரிகா பிரசாத் திட்டமிட்டு அதற்கான அமைப்பு ஒன்றையும் ஏற்படுத்தியுள்ளார்.