உலக, நாடு, தமிழக வாசகர்கள் தினமலர் நாளிதழிற்கு எழுதிய கடிதம்
முனைவர் மீனாட்சி பட்டாபிராமன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: ஆசிரியர் பணியை போன்றே, மருத்துவ பணியும் உன்னதமானது. உயிர் காக்க கடவுளுக்கு அடுத்து மக்கள் நம்புவது டாக்டர்களையே. அப்படி அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டிய மருத்துவ துறை, தமிழகத்தில் சீர்கெட்டு, பெயர் கெட்டு பாழ்பட்டு நிற்கிறது. வாருங்கள், விஷயத்துக்கு போவோம்...
விருதுநகர் மாவட்டம் சாத்துாரைச் சேர்ந்த ஒரு குழந்தைக்கு, நாக்கு சரியில்லாமல், அரசு மருத்துவமனையில் ஆப்பரேஷன் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பின், பரிசோதனைக்காக சென்ற போது, அதே மருத்துவமனையில், மீண்டும் ஒரு ஆப்பரேஷன் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளனர். பெற்றோர் சம்மதிக்க, குழந்தை சிகிச்சைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளது.
![]()
|
சிகிச்சை முடிந்து வந்த குழந்தையை பார்த்த போது, பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். காரணம், நாக்குக்கு பதில் பிறப்புறுப்பில் ஆப்பரேஷன் செய்யப்பட்டிருந்தது. டாக்டரிடம் குழந்தையின் தந்தை என்னவென்று விசாரிக்க, அந்த அரைவேக்காட்டு டாக்டர், குழந்தைக்கு சிறுநீரக பிரச்னையும் இருந்ததால், ஒரே மயக்க மருந்தில் அங்கும் ஆப்பரேஷன் செய்ததாகக் கூறியுள்ளார்.
நாக்கு ஆப்பரேஷன் என்று கூறி, பிறப்புறுப்பிலும் ஆப்பரேஷன் செய்தவர்கள், அதை குழந்தையின் பெற்றோருக்கு முன்னரே தெரியப்படுத்தி இருக்க வேண்டாமா... ஒரே நேரத்தில் இரண்டு ஆப்பரேஷனை, அந்த பச்சிளம் குழந்தை தாங்குமா... சென்னையில் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவுக்கு நேர்ந்த கொடூரத்தின் துயரம் ஆறாத நிலையில், இப்படி ஒரு அதிர்ச்சி தரும் சம்பவம் நடந்துள்ளது.
நாக்கு ஆப்பரேஷன் என்று சொல்லி, பிறப்புறுப்பில் ஆப்பரேஷன் செய்த டாக்டர் பற்றிய செய்தியை கேட்கும் போது, 'நீட்' தேர்வுக்கு முன், மருத்துவ படிப்புக்கான இடங்களை கோடிகளில் விற்ற, அரசியல்வா(வியா)திகளின் கல்லுாரிகளில் படித்தவர்களாக இருப்பர் என்றே தோன்றுகிறது. இனியும், இதுபோன்ற கொடுமையான நிகழ்வுகள் நடைபெறாமல் இருக்க வேண்டும் எனில், ஒன்று டாக்டர்கள், பணியில் அர்ப்பணிப்போடு செயல்படவேண்டும்; மனசாட்சியோடு நடந்து கொள்ள வேண்டும்.
இரண்டாவது, மருத்துவ பணிக்கு தேர்வு செய்யப்படுவோர், அதற்கான கல்வித் தகுதியை, அனுபவத்தை முழுமையாக பெற்றிருப்பது உறுதி செய்யப்பட வேண்டும். 'வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்.,' போன்ற தற்குறிகள், அரசு மருத்துவர்களாகி விட அனுமதிக்க கூடாது.
அதேநேரத்தில், மருத்துவ படிப்புக்கு தகுதியான மாணவர்களை தேர்வு செய்ய, மத்திய அரசால் நடத்தப்படும், 'நீட்' தேர்வு வேண்டாம் என்று சொல்லும் ஆட்சியாளர்களும், இனியாவது தங்களின் எண்ணத்தை மாற்றிக் கொள்ள வேண்டும். நடக்கும் சம்பவங்களை பார்த்தால், அரசு மருத்துவமனைகளுக்கு செல்லவே குலை நடுங்குகிறது. விண்ணகத்து எமனின் ஏஜன்டுகளா அரசு டாக்டர்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.