அமைச்சர்கள் முன்னிலையில், ம.தி.மு.க., நிர்வாகிகள், தி.மு.க.,வில் ஐக்கியமானதால், வைகோ, 'அப்செட்' ஆகியுள்ளார்.
அத்துடன், தி.மு.க., கூட்டணியில், பா.ம.க., - மக்கள் நீதி மையம் - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சிகளை சேர்க்க ரகசிய பேச்சு நடப்பதால், ம.தி.மு.க.,வுக்கு மவுசு குறையும் சூழல் உருவாகி உள்ளது.
மவுசு குறையும்
தி.மு.க., கூட்டணியில் உள்ள ம.தி.மு.க.,வுக்கு, லோக்சபா, ராஜ்யசபாவில் தலா ஒரு எம்.பி., - நான்கு எம்.எல்.ஏ.,க்கள், ஒரு துணை மேயர் மற்றும் ஒன்றிய, நகர, மாநகராட்சி கவுன்சிலர்கள் உள்ளனர்.
வைகோ மகன் துரைக்கு, தலைமை நிலைய செயலர் பதவி வழங்கப் பட்டதால், ம.தி.மு.க.,வில் சலசலப்பு ஏற்பட்டது. எதிர்ப்பு தெரிவித்த, மூன்று மாவட்ட செயலர்கள் நீக்கப்பட்டனர்.
சமீபத்தில், கொங்கு மண்டலம், தாராபுரம் ஒன்றிய செயலரும், கவுன்சிலருமான தெய்வசிகாமணி தலைமையில், ஏராளமான ம.தி.மு.க.,வினர் அமைச்சர்கள் சாமிநாதன், கயல்விழி முன்னிலையில் தி.மு.க.,வில் இணைந்தனர். இதனால், வைகோ, 'அப்செட்' ஆகியுள்ளார்.
அத்துடன், வரும் லோக்சபா தேர்தலுக்கு, பா.ம.க., - மக்கள் நீதி மையம், தே.மு.தி.க., போன்ற கட்சிகளை கூட்டணியில் சேர்க்க, திரைமறைவில் பேச்சு நடந்து வருகிறது. இந்தக் கட்சிகள் கூட்டணியில் சேர்ந்தால், ம.தி.மு.க.,வுக்கு மவுசு குறையும் என்பதாலும், கூட்டணியில் புகைச்சல் கிளம்பியுள்ளது.
பச்சைக்கொடி
இதுகுறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் கூறியதாவது:
சட்டசபை தேர்தலில், கொங்கு மண்டலத்தில், மொடக்குறிச்சி தொகுதியை பா.ஜ., கைப்பற்றியது. தாராபுரம் தொகுதியில் குறைந்த ஓட்டுகள் வித்தியாசத்தில், மத்திய அமைச்சர் முருகன் தோல்வி அடைந்தார்.
ஈரோடு லோக்சபா தொகுதியில், பா.ஜ.,வின் செல்வாக்கு அதிகரித்து வருகிறது. இதனால், அந்த தொகுதியில் இருந்து, ம.தி.மு.க., அதிருப்தியாளர்கள், பா.ஜ.,விற்கு ஓடாமல் தடுக்க, அவர்களை சேர்க்க, தி.மு.க., பச்சைக்கொடி காட்டியுள்ளது.
மாவட்ட வாரியாக, ம.தி.மு.க.,வின் அதிருப்தி நிர்வாகிகளுக்கு எல்லாம், தி.மு.க.,வின் கதவு திறக்குமானால், ம.தி.மு.க., கூடாரம் காலியாகும்.
ஆனால், கூட்டணி தர்மத்தை மதித்து, ம.தி.மு.க., அதிருப்தி மாவட்ட செயலர்களை சேர்க்க, தி.மு.க., அனுமதி தரவில்லை.
![]()
|
லோக்சபா தேர்தலில் துரைக்கு ஒரு தொகுதி ஒதுக்க, தி.மு.க., முன்வரும். ஏற்றால், ம.தி.மு.க.,வை உடைக்க தி.மு.க., விரும்பாது. வேறு கூட்டணிக்கு ம.தி.மு.க., போக விரும்பினால், அக்கட்சியை உடைக்கவும், தி.மு.க., தயங்காது.
அதேசமயம், மத்திய அமைச்சரவையில், தி.மு.க., இடம் பெறும் பட்சத்தில், துரை வைகோவுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்றால், தி.மு.க.,வுடன் ம.தி.மு.க.,வை இணைக்க வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -